கோப்பு படம்.
ஆக்கிரமிப்பால் குறுகலான மண்ணாடிப்பட்டு - மதுரப்பாக்கம் சாலை
- அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
- குறுகிய சாலையின் காரணமாக ஒரு வாகனம் எதிரே வந்தால் மறு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே உள்ளது மண்ணாடிப்பட்டு கிராமம் புதுச்சேரி பகுதியான செல்லிப்பட்டு, சோரப்பட்டு மற்றும் பி.எஸ். பாளையம் பகுதிகளில் இருந்து தமிழகப் பகுதியான விழுப்புரம் செல்வதற்கு திருக்கனூர் கடைவீதி வழியாகவும் செல்லலாம்.
அதே நேரத்தில் மண்ணாடிப்பட்டில் இருந்து மதுரப்பாக்கம் வழியாகவும் விழுப்புரம் செல்லலாம் .
மண்ணாடிப்பட்டு - மதுரப்பாக்கம் இடையேயான சாலை வழியினை பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலமாக சுமார் 5 கிலோமீட்டர் அளவிற்கு மிச்சமாவதுடன் பயண நேரமும் குறைகிறது.இந்த சாலை சிலரின் ஆக்கிரமிப்பின் காரணமாக குறுகிவிட்டது.
இந்த சாலையின் வழியாக ஏராளமான கண்டெய்னர் லாரிகள், பள்ளி வாகனங்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்டவை செல்கின்றன.
குறுகிய சாலையின் காரணமாக ஒரு வாகனம் எதிரே வந்தால் மறு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் வாகனங்கள் அடிக்கடி தலை குப்புற கவிழ்ந்து விழுவதும், விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது.
இது குறித்து தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக கவனித்து சாலையினை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மண்ணாடிப்பட்டு சமூக ஆர்வலர் ரமேஷ் கூறியதாவது:-
மண்ணாடிப்பட்டு - மதுரப்பாக்கம் இடையேயான சாலை திருவண்ணாமலை பாதை என கூறப்படுகிறது. புதுச்சேரி பகுதியான மண்ணாடிப்பட்டு வரை 33 அடி அகலமான சாலை காணப்படுகிறது.
அதிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் அளவில் உள்ள தமிழக சாலை ஆக்கிரமிப்பின் காரணமாக சுருங்கியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பினை அகற்றி இந்த சாலையினை அகலப்படுத்த வேண்டும். இதன் மூலம் புதுச்சேரி தமிழகப் பகுதி இடையே புதிய சாலை வசதி ஏற்படுவதுடன் இப்பகுதி மக்களுடைய வாழ்வா தாரமும் உயர்வடையும்.
இரு மாநில அரசுகளும் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.