புதுச்சேரி

கோப்பு படம்.

பால் உற்பத்தியை பெருக்க அரசு தீவிர நடவடிக்கை-முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்

Published On 2023-03-15 14:30 IST   |   Update On 2023-03-15 14:30:00 IST
  • பாண்லே பொருட்கள் மக்களிடம் அதீத வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவற்றின் தட்டுப்பாடு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?
  • பால் பொருட்களை தயாரித்து தரமாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்வதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

கே.எஸ்.பி.ரமேஷ்(என்.ஆர்.காங்):- பாண்லே பொருட்கள் மக்களிடம் அதீத வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவற்றின் தட்டுப்பாடு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? பாண்லே நிறுவனத்தை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?

முதல்-அமைச்சர் ரங்கசாமி:- பாண்லே நிறுவனம் பாலுடன் பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை தயாரித்து தரமாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்வதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது உள்ளூரில் போதிய அளவு பால் கிடைக்காததால் பால் பொருட்கள் தயாரிப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பால் உற்பத்தியை அதிகரிக்க வங்கிகள் மூலம் கறவை மாடு கடன், பசுந்தீவன வளர்ப்பை ஊக்குவிப்பது, மானியத்துடன் மாட்டு தீவனம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமும், அண்டை மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்வதன் மூலம் பற்றாக்குறையை போக்கி பாண்லே பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

நாள்தோறும் ஐஸ்கிரீம் உற்பத்தி அளவு 10 ஆயிரம் லிட்டரில் இருந்து 20 ஆயிரம் லிட்டராக மேம்படுத்தப்பட உள்ளது. பாண்லே பிரெட் தயாரிப்பு தினசரி 400 என்ற நிலையிலிருந்து 3 ஆயிரமாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதோடு நெய், குல்பி, பால்கோவா, சுவையூட்டப்பட்ட பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

Similar News