புதுச்சேரி

கோப்பு படம்.

ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு-ரங்கசாமி உறுதி

Published On 2022-08-23 14:42 IST   |   Update On 2022-08-23 14:42:00 IST
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உப்பளம் தொகுதியில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆட்டுப்பட்டியில் குடியிருப்புகள் கட்ட ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சம்பந்தப்பட்ட இடம் கையகப்படுத்தப்பட்ட பின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம் வருமாறு:-

கென்னடி(தி.மு.க.): ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உப்பளம் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் எத்தனை? ஆட்டுப்பட்டி பகுதியில் குடியிருப்பு கட்ட இத்திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? சம்பந்தப்பட்ட அரசு துறையில் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளதா? எப்போது பணிகள் தொடங்கப்படும்?

முதல்-அமைச்சர் ரங்கசாமி:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உப்பளம் தொகுதியில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆட்டுப்பட்டியில் குடியிருப்புகள் கட்ட ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தடையில்லா சான்று இன்னும் பெறப்படவில்லை. சம்பந்தப்பட்ட இடம் கையகப்படுத்தப்பட்ட பின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

கென்னடி: தடையில்லா சான்று பெறப்பட்டதா? என்ற கேள்விக்கு தவறான தகவல் அளித்துள்ளனர். நகர பகுதியில் உள்ள மிகவும் மோசமான குடியிருப்பு ஆட்டுப்பட்டி. இங்கு வசிக்கும் மக்கள் மிக குறுகிய இடத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு அரசு அடுக்குமாடி குடியிருப்பை கட்டித்தருவதாக ஏற்கனவே உறுதியளித்தது. முதல்-அமைச்சரும் உறுதியளித்தார். இதை நிறைவேற்றித்தர வேண்டும்.

முதல்-அமைச்சர்: குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என்ற எண்ணம்தான் அரசுக்கும் உள்ளது. எல்.ஜி.ஆர். பட்டா பெற்றவர்கள் இதற்கு சம்மதிப்பார்களா? என தெரிய வேண்டும். அதோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிலத்தை கையகப்படுத்த முடியாது. நகராட்சி நிலம் என்பதால் நகராட்சிக்கு பணம் கொடுத்து நிலத்தை ஆர்ஜிதம் செய்ய வேண்டும். நகராட்சிக்கு வருவாய் வரும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வாடகைக்கு விடலாமா? என்ற எண்ணமும் உள்ளது. நிலத்தை கையகப்படுத்த சுமார் ரூ.12 கோடி தேவைப்படுகிறது.

எதிர்கட்சித்தலைவர் சிவா:- நகர பகுதியில் இதுபோன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர். நீண்டகாலமாக குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அரசு இதை கட்டித்தர வேண்டும். இதேபோல திடீர் நகரில் உள்ள மக்களுக்கும் குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்.

நேரு(சுயே): திடீர் நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு குடியிருப்பு கட்டித்தருவதாக வாக்குகளை பெற அரசியல் செய்து ஏமாற்றினர்.

ஆனால் கடைசிவரை வீடு கட்டித்தரவில்லை. தற்போது இப்பகுதி பன்றி மேய்க்கும் இடமாகவும், கஞ்சா விற்பனை செய்யும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. இங்குள்ள மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி:- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நில ஆர்ஜிதம் செய்ய முடியாது. நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை பணம் கொடுக்காமல் மாற்றவும் முடியாது.

சிவா: தமிழகத்தில் இதுபோன்ற இடங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆர்ஜிதம் செய்து வீடு கட்டி தருகின்றனர்.

கென்னடி: அப்பகுதியில் 155 பேருக்கு வீடு தேவை. 200 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வம்பாகீரப்பாளையத்தில் வீடின்றி வசிப்பவர்களுக்கும் வீடு அளிக்கலாம்.

முதல்-அமைச்சர்: வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். இதற்காகத்தான் அரசு பல்வேறு திட்ங்களை செயல்படுத்தி வருகிறது. ஆட்டுப்பட்டி மக்களுக்கு எந்த வகையில் வீடு கட்டித்தரலாம் என ஆலோசித்து முடிவெடுத்து குடியிருப்பு கட்டி தரப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

Similar News