புதுச்சேரி

அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார்  தீயணைப்பு வீரரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த காட்சி.

மரங்களை அகற்றும் பணியில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரர்

Published On 2023-07-05 05:55 GMT   |   Update On 2023-07-05 05:55 GMT
  • மரத்தினை கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
  • அவரின் 2 கால்களிலும் 4 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கழுத்திலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுவை கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் டிரைவராக பணிபுரிபவர் குமார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவையில் பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்தது. புதுவையில் சுமார் 100-டன் மரக்கழிவுகள் வெட்டி அகற்றப்பட்டது.

இந்த பணியில் புதுவை உள்ளாட்சி, தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக பணியாற்றினர்.

புதுவை ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியிலிருந்த பெரிய மரம் சாய்ந்து பின்பக்கம் சுப்பையா நகரில் உள்ள குடியிருப்பில் வீடுகளின் மேல் விழுந்தது. இந்த மரத்தினை கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு துணையாக தீயணைப்பு வாகன டிரைவர் குமாரும் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பெரிய மரக்கிளை அவரின் மீது விழுந்தது.

இதில் குமார் படுகாய மடைந்தார். உடனடியாக அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்தில் அவரின் 2 கால்களிலும் 4 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கழுத்திலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை அரசு தலைமை ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கேள்விப்பட்ட அமைச்சர் சாய் சரவணக்குமார், அங்காளன் எம்.எல்.ஏ., அரசு செயலர் முத்தம்மா ஆகியோர் அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அவர் குணமடைய பல மாதம் ஆகும் என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த குமார் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News