புதுச்சேரி

நள்ளிரவில் கார், வேன், கடைகளை அடித்து நொறுக்கிய போதை கும்பல்: போலீஸ் நிலையம் அருகே அட்டூழியம்

Published On 2023-10-29 13:51 IST   |   Update On 2023-10-29 13:51:00 IST
  • கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோரிமேடு பகுதியில் மர்ம கும்பல் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி சென்றனர்.
  • கடைகளின் ஷட்டர்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றனர்.

புதுச்சேரி:

புதுவையில் சமீப காலமாக போதை கும்பல் செய்யும் செயல்கள் அத்துமீறி வருகின்றன.

குறிப்பாக கஞ்சா பழக்கத்துக்குள்ளான ஆசாமிகள் என்ன செய்கிறோம் என்றே அறியாமல் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

அதிலும் 15 வயது முதலான சிறுவர்கள் கஞ்சா போதையில் பெண்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்கள் தனியாக நடந்து செல்லவே அச்சமடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போதை ஆசாமிகள் சாலைகளில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை நள்ளிரவில் அடித்து நொறுக்கி செல்கின்றனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோரிமேடு பகுதியில் மர்ம கும்பல் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி சென்றனர்.

இதுபோல் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே நிறுத்தியிருந்த ஆட்டோக்களின் கண்ணாடிகளையும் மர்ம நபர்கள் உடைத்து சென்றனர்.

இந்த நிலையில் புதிய பஸ்நிலையம் அருகே உருளையன்பேட்டை போலீஸ்நிலையம் எதிரே தென்னஞ்சாலை ரோடு பகுதியில் நேற்று நள்ளிரவு சில போதை ஆசாமிகள் அங்கு நிறுத்தி வைத்திருந்த சொகுசு கார், மினி வேன் போன்றவற்றின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

மேலும் அங்குள்ள கடைகளின் ஷட்டர்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

உடைக்கப்பட்ட கார் கண்ணாடியை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

 சேதமடைந்த வாகனங்களை பார்வையிட்டார். போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரழைத்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வாகனங்களை உடைத்து சேதப்படுத்திய போதை ஆசாமிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

புதுவையில் தொடர்ந்து இதுபோன்று நள்ளிரவில் சாலைகளில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை மர்ம நபர்கள் அடித்து உடைத்து செல்லும் சம்பவத்தால் பொதுமக்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்லவே அச்சமடைந்துள்ளனர். 

Tags:    

Similar News