கோப்பு படம்.
தெரியாத செல் நெம்பரில் இருந்து வீடியோ கால் வந்தால் எடுக்காதீர்கள் -சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
- செல்போன் தொழில்நுட்பத்தால் அதிநவீன வசதிகள் வந்துவிட்டது.
- வங்கியில் இருந்து பேசுவதாக ஓ.டி.பி. எண்ணை கேட்டு பணத்தை திருடுகின்றனர்.
புதுச்சேரி:
இந்திய ரிசர்வ் வங்கி சென்னை மண்டலம் சார்பில் அங்கீகரிக்கப்படாத வைப்பு நிதி சேகரிப்பு, இணைவழி நிதி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடந்தது.
நிகழ்ச்சியில் சைபர் கிரைம் எஸ்.பி. மனீஷ் பேசியதாவது:-
செல்போன் தொழில்நுட்பத்தால் அதிநவீன வசதிகள் வந்துவிட்டது. இதனால் நன்மைகள் உள்ள அளவுக்கு தீமைகளும் உள்ளது. அதிக குற்றங்கள் நடக்கிறது. வங்கியில் இருந்து பேசுவதாக ஓ.டி.பி. எண்ணை கேட்டு பணத்தை திருடுகின்றனர். பகுதிநேர வேலை, வெளிநாட்டில் வேலை என மோசடி செய்கின்றனர். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பெயர்களை மாற்றி போலி இணையதள பக்கம் உருவாக்கி பணம் திருடுகின்றனர்.
நாம் பயன்படுத்தும் இணை யதளம் உண்மையானதா? என உறுதி செய்ய வேண்டும்.
சமூகவலைதளம் மூலம் நண்பர்கள் பணம் கேட்டால் அனுப்பக்கூடாது. லாட்டரி, வெளிநாட்டில் பரிசு போன்ற மோசடிகளை நம்பக்கூடாது. கிரிப்டோகரன்சி, பிட் காயின்களில் முதலீடு செய்யக் கூடாது. பேஸ்புக் மூலம் திடீரென வீடியோ காலில் வரும் நபர் உங்கள் படத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோ தயாரித்து பணம் கேட்டு மிரட்டுவர்.
எனவே தெரியாத செல் நெம்பரில் இருந்து வீடியோ கால் வந்தால் எடுக்காதீர்கள். சைபர் கிரைம்களில் பணம் இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு போன் செய்யுங்கள். உங்கள் பணத்தை மீட்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.