கோப்பு படம்.
அ.தி.மு.கவை பற்றி பேச கம்யூனிஸ்டுகளுக்கு தகுதியில்லை
- அன்பழகன் கண்டனம்
- தவறுகளை சுட்டிக்காட்டியோ வாய் திறக்காத கம்யூனிஸ்ட்டு கட்சிகள் எங்களை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.கவை அடிமைக்கட்சி என்றும், சொந்த புத்தியில் செயல்படாத கட்சி என்றும் இந்தியகம்யூனிஸ்ட் தமிழ்மாநில செயலாளர் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் தி.மு.க.வோடு கூட்டணி வைத்து போட்டியிட்ட கம்யூனிஸ்டுகள் இன்று தமிழகத்தில் அறிவித்த எந்த திட்டங்களையும் தி.மு.க அரசு செயல்படுத்தாது குறித்தும், மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கட்ட பஞ்சாயத்துகள், லாக்கப் மரணம், சிறைச்சாலை மரணம், போலீஸ் நிலையத்தில் மரணம், தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை, ஆட்சியாளர்களின் முறைகேடுகள், ஊழல்கள், வன்கொடுமைகள் இவையெல்லாம் தினந்தோறும் தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத இவற்றை பற்றியெல்லாம் இன்று வரை எதிர்த்தோ அல்லது தவறுகளை சுட்டிக்காட்டியோ வாய் திறக்காத கம்யூனிஸ்ட்டு கட்சிகள் எங்களை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது.
உண்மையான கம்யூனிஸ்ட்டுகளின் உணர்வுகளை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் முத்தரசன் போன்ற சுயநலமிக்கவர்களுக்கு அ.தி.மு.க.வை பற்றியும் எங்களது கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியாரை பற்றியும் பேசுவதற்கு எந்த தகுதியும், இல்லை.
புதுவையில் நடந்து வரும் சாலைபணிகளில் முறைகேடு நடக்கிறது. தரமற்ற சாலைகள் போடப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை கண்காணிப்பதில்லை. இதை முதல்-அமைச்சர் கவனத்தில் கொண்டு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரிநீரை காரைக்காலுக்கு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில இணை செயலாளர் முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.