புதுச்சேரி

 அரியூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

அரியூரில் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-12-02 09:10 GMT   |   Update On 2023-12-02 09:10 GMT
  • விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை அமைக்கும் பணியால் மழைநீர் தேங்கியது
  • இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.

புதுச்சேரி:

விழுப்புரம்-புதுச்சேரி இடையிலான நாகப்பட்டினம் 4 வழிச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் 4 வழிச்சாலை பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

அதுபோல் இப்பணியால் அரியூர் மகாலட்சுமி நகர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மகாலட்சுமி நகரை சுற்றியுள்ள பல்வேறு வீதிகளிலும் மற்றும் அரசு பள்ளி ஒட்டி உள்ள சர்வீஸ் சாலையிலும் மழை நீர் அதிகம் தேங்கியுள்ளது இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.

அதுபோல் தினந்தோறும் பள்ளி மாணவர்கள் இந்த கழிவு நீர் கலந்த மழை நீரில் கடந்து சென்று மாலை வீடு திரும்பும் பொழுது காய்ச்சலுடன் திரும்புகின்றனர்.

இந்த மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் சுற்றிலும் பள்ளிகள் அதிகம் உள்ளதால் முதற்கட்டமாக இதனை விரைந்து செய்திட பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் குடிநீரில் இந்த மழை நீர் கழிவு நீர் உள்ளிட்டவை கலப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் பொது மக்கள் பல்வேறுமுறை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி அதிகாரி களிடம் முறையிட்டனர்.

இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கை எடுக்காததால் அரியூர் பகுதி பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையிலான போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News