புதுச்சேரி

முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவை புறக்கணிக்கிறார்: மத்திய மந்திரியிடம் எம்.எல்.ஏ.க்கள் முறையீடு

Published On 2022-12-15 13:06 GMT   |   Update On 2022-12-15 13:06 GMT
  • புதுவைக்கு வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவு, நியமன எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறியுள்ளனர்.
  • எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அளிப்பதில்லை என்றும் கூறினர்.

புதுச்சேரி:

புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

கூட்டணி ஆட்சி அமைந்து 1 1/2 ஆண்டாகியும் இதுவரை எம்.எல்.ஏ.க்களுக்கு கூட வாரியதலைவர் பதவி வழங்கப்படவில்லை. இது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

எதிர்க்கட்சி தொகுதிகளில் நடைபெறும் பணிகள்கூட தங்கள் தொகுதிகளில் நடைபெறவில்லை என பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். அதோடு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். கட்சி தலைமையிடமும் ஒரு சிலர் நேரடியாக புகார் செய்துள்ளனர்.

இந்த நிலையில் புதுவைக்கு வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவு, நியமன எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் ரங்கசாமி மீது புகார் கூறியுள்ளனர். ரங்கசாமி கூட்டணி கட்சியான பா.ஜனதாவை எந்த வகையிலும் ஆலோசனை செய்யாமல் பல முடிவுகளை எடுப்பதாகவும், தன்னிச்சையாக அவர் செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அளிப்பதில்லை என்றும் கூறினர். இதுகுறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கட்சித் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மத்திய மந்திரி கிஷன்ரெட்டி, உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் இதுகுறித்து தெரிவித்து, நேரம் பெற்று தருவதாக உறுதியளித்தார். அமித்ஷாவை சந்தித்து உங்கள் புகார்களை நேரடியாக தெரிவியுங்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News