புதுச்சேரி

சட்டசபை வளாகத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சந்திர பிரியங்கா அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள காட்சி. 

பதவி நீக்கம் செய்யப்பட்ட சந்திர பிரியங்கா அறைக்கு சீல்: சட்டசபை செயலகம் நடவடிக்கை

Published On 2023-10-24 12:11 IST   |   Update On 2023-10-24 12:11:00 IST
  • 40 ஆண்டுகளுக்கு பிறகு புதுவை அமைச்சரவையில் இடம் பெற்ற பெண் என்ற பெருமையை சந்திர பிரியங்கா பெற்றார்.
  • சட்டசபையில் சந்திர பிரியங்காவின் அறையில் இருந்த பொருட்கள் காலி செய்யப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை மாநிலம் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சந்திர பிரியங்கா.

புதுவை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களில் ஒரே பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையைப் பெற்றவர். அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுவை அமைச்சரவையில் இடம் பெற்ற பெண் என்ற பெருமையை சந்திர பிரியங்கா பெற்றார். ஆனால் அது நீடிக்கவில்லை. அவரது செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தியால் சந்திர பிரியங்காவை நீக்க கவர்னருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்தார்.

புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் பதவி நீக்கத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் வழியே ஜனாதிபதியின் அனுமதியை பெற வேண்டும்.

வழக்கமாக நீக்கப்பட்ட அன்றே ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்து விடும். ஆனால் சந்திர பிரியங்கா நீக்கம் விவகாரத்தில் கடந்த 13 நாட்களாக இழுபறி ஏற்பட்டது.

முடிவாக கடந்த 2-ந் தேதி சந்திர பிரியங்கா பதவி நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட புதுவை அரசிதழிலும் 21-ந் தேதியே வெளியிடப்பட்டது.

இதையடுத்து சட்டசபையில் சந்திர பிரியங்காவின் அறையில் இருந்த பொருட்கள் காலி செய்யப்பட்டது. அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் அறைக்கு வெளியே இருந்த அமைச்சர் பெயர் பலகையும் அகற்றப்பட்டது. அறைக்கு வெளியே பூட்டில் சட்டமன்ற செயலர் தயாளன் என கையெழுத்திடப்பட்ட சீல் ஒட்டப்பட்டுள்ளது.

அமைச்சரின் அறைக்குள் கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷின் உட்பட பல பொருட்கள் உள்ளன. இவற்றை அலுவலக ரீதியாக இன்னும் ஒப்படைக்காத காரணத்தினால் சீல் வைக்கப்பட்டதாக சட்டமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News