புதுச்சேரி

கோப்பு படம்.

ரொட்டி- பால் ஊழியர்கள் பணி நிரந்தரம்-அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

Published On 2022-08-23 14:50 IST   |   Update On 2022-08-23 14:50:00 IST
  • மடுகரையில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு எம்.ஆர்.சுப்புராயன் அரசு தொடக்கப்பள்ளி என கடந்த ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு நடை முறையில் உள்ளதை சுப்புராய கவுண்டர் அரசு தொடக்கப்பள்ளி என திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்படுமா?
  • புதிய கல்வி கொள்கை அடிப்படையில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் எவ்வளவு? இது அரசு, தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறதா? இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதா?

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

ஏ.கே.டி. ஆறுமுகம்(என்.ஆர்.காங்கிரஸ்):- மடுகரையில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு எம்.ஆர்.சுப்புராயன் அரசு தொடக்கப்பள்ளி என கடந்த ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு நடை முறையில் உள்ளதை சுப்புராய கவுண்டர் அரசு தொடக்கப்பள்ளி என திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்படுமா? புதிய கல்வி கொள்கை அடிப்படையில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் எவ்வளவு? இது அரசு, தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறதா? இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதா?

அமைச்சர் நமச்சிவாயம்: அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்ப பெயர் திருத்தம் செய்யப்படும். தேசியகல்வி கொள்கையில் மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் 30:1 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படாததால் அனைத்து பள்ளிகளிலும் கல்வி உரிமை சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க அறி வுறுத்தப்பட்டுள்ளனர். இதை கண்காணிக்க அமைப்பும், நெறிமுறையும் வரையறுக்கப்படும்.

கல்யாண சுந்தரம்(பா.ஜனதா): சமுதாய தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் ஜாதி இடம் பெற்றிருக்கும். புதுவையில் 60 சதவீதம் வன்னியர்கள் வசித்து வருகின்றனர். பல சமுதாய தலைவர்களின் பெயர்களில் உள்ள பள்ளிகளில் ஜாதியும் இடம்பெற்றுள்ளது. கவுண்டர் மட்டும் எடுப்பது ஏன்?

ஏ.கே.டி. ஆறுமுகம்: பிறந்த பதிவு சான்றிதழில் கூட சுப்புராய கவுண்டர் என்றே பெயர் இடம்பெற்றுள்ளது. அது மட்டுமின்றி அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் எம்.ஆர்.சுப்புராய கவுண்டர் என்ற பெயரில்தான் இருந்தார்.

அமைச்சர் நமச்சிவாயம்:- இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. அமைச்சரவை முடிவெடுத்து பெயர் மாற்றம் செய்யப்படும். கடந்தகாலத்தில் ஒரு அமைப்பு புகார் செய்ததால்தான் அரசாணை திரும்பப்பெறப்பட்டது. நிச்சயமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.

கல்யாணசுந்தரம்: கல்வி உரிமை சட்டம் ஏன் தனியார் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தாமல் உள்ளீர்கள்?

அமைச்சர் நமச்சிவாயம் :- கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர்களுக்கு அரசே முழுமையாக செலவு செய்ய வேண்டும். நாம் ஏற்கனவே கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.

பிற மாநிலங்களை போல ஒரு பள்ளிக்கும், மற்றொரு பள்ளிக்கும் தூரமும் இல்லை. கூடுதல் செலவாகும் என்பதால் நிறைவேற்றாமல் உள்ளோம்.

கென்னடி: தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்.

அமைச்சர் நமச்சிவாயம் : கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு ரூ.40 கோடி கூடுதலாக செலவாகும். தேசிய கல்வி கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராகும் சூழலில் உள்ளோம். அத்திட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்.

ஏ.கே.டி. ஆறுமுகம்:- கொரோனாவுக்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த காலத்தைவிட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை.

அமைச்சர் நமச்சிவாயம் :- அரசின் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என முதல்-அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளோம். புதிதாக 73 ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து காலி பணியிடங்களை கணக்கிட்டு நிரப்புவோம்.

கல்யாணசுந்தரம்: சமீபத்தில் என் தொகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றேன். அங்குள்ள மாணவர்கள் அடிப்படை வசதியில்லை என புகார் தெரிவித்தனர். கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் சீர்கேடாக இருந்தது. உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இதற்கு குரூப் டி பணியில் ஆட்களை எடுக்காததுதான் காரணம்.

அமைச்சர் நமச்சி வாயம்:- ரொட்டி, பால் ஊழியர்கள்தான் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டு பணி முடித்தவர்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.

அத்திட்டத்தின் கீழ் ரொட்டி, பால் ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்து அவர்களுக்கு கூடுதலாக இந்த பணி வழங்க உள்ளோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

Similar News