புதுச்சேரி

உண்ணாவிரத போராட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசிய போது எடுத்தபடம். அருகில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான் உள்ளார்.

மீனவர்களை காப்பதற்கு பா.ஜனதா- என்.ஆர். காங்கிரஸ் அக்கறை செலுத்தவில்லை

Published On 2023-08-21 13:54 IST   |   Update On 2023-08-21 13:54:00 IST
  • கடல் நீர் உள்ளே புகுந்து மீனவர்க ளின் படகுகள், வீடுகள் சொத்துகள் பாதிப்படைந்து வருகிறது.
  • மீனவ மக்கள் அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர்.

புதுச்சேரி:

புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிள்ளைச்சாவடி, பெரியக்காலாப்பட்டு, சின்னகாலப்பட்டு மற்றும் கணபதிச்செட்டிகுளம் மீனவ பகுதியில் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் உள்ளே புகுந்து மீனவர்க ளின் படகுகள், வீடுகள் சொத்துகள் பாதிப்படைந்து வருகிறது.

அடுத்த மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்ய உள்ள கனமழை கடலில் ஏற்படும் புயல் உள்ளிட்ட சீற்றங்களால் மீனவ கிராம பகுதி முற்றிலும் அழியும் நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக புதுச்சேரி அரசும் மத்திய அரசும் மீனவ பகுதியில் தூண்டில் வளைவை அமைத்து மீனவ கிராமங்களை காப்பாற்ற வேண்டுமென மீனவ மக்கள் அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில் காலாப்பட்டு சினிமா தியேட்டர் எதிரே 4 கிராம மீனவ மக்களும் இன்று காலை முதல் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மீனவ பஞ்சாயத்து தலைவர் வேலு தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், கலந்து கொண்டு மத்திய மாநில அரசை கண்டித்து பேசினர்.

போராட்டத்தில் வைத்தி லிங்கம் எம.பி. பேசியதாவது:-

கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பிள்ளை சாவடி மீனவ பகுதியை பார்வையிட சென்றேன். அங்குள்ள கோயில் வாசல் வரை கடல் நீர் வந்து செல்கிறது.

அந்தப் பகுதியில் இருந்த சுடுகாடு கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மீனவ மக்கள் படகு நிறுத்த இடம் இல்லாமல் பக்கத்து மீனவப் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிள்ளைச் சாவடி, பெரியக்காலாப் பட்டு, சின்னகாலாப்பட்டு, கணபதி செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க கோரி 2 முறை நாடாளு மன்றத்தில் பேசி உள்ளேன்.

மீனவ பகுதியில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி உடனடியாக அங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். நான் பேசுவதை விட புதுச்சேரி யில் ஆளும் பா.ஜனதா கூட்டணி அரசு சொன்னால் உடனே நிதியை வழங்கு வார்கள். புதுச்சேரி ஆளும் என்.ஆர். காங்கிர சுக்கும் கூட்டணி கட்சியான பா.ஜனதா அரசுக்கும் மீனவர்க ளின் உயிரை காப்பாற்றுவதற்கு அவர்க ளுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு அக்கறை இல்லை.

புதுச்சேரிக்குள் கடல் நீர் உள்ளே புகுந்ததால் குடிநீர் உப்பு நீராக மாறி உள்ளது ஆயிரம் அடியில் இருந்து தண்ணீர் எடுத்தாலும் உப்பு நீராக தான் உள்ளது. பக்கத்து பகுதியான தமிழக மீனவ பகுதிகளில் கடல் நீரை உள்ளே போகாமல் தடுக்க எப்படியெல்லாம் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என்பதை யாவது புதுவை அரசு தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு அமைச்சர் கூட வந்து இந்த பகுதியில் ஆய்வு நடத்தி அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ. மட்டும் வந்து பாதிக்கப்பட்ட இடத்தை பார்த்து செல்வதால் எந்த பலனும் இல்லை.

4 கிராம மீனவர்களை பாதிப்பில் இருந்து மீட்காவிட்டால் மீனவ சங்கப் பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்து முறையிட உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

மீனவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், வன்னியர் வளர்ச்சி இயக்க தலைவர் செந்தில் கவுண்டர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News