கோப்பு படம்.
காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரம் முழுவதும் இயக்க நடவடிக்கை
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
- ஒரே நாளில் 1 லட்சத்து 46 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 26 ஆயிரம் கோடி புதுவை மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை ரெயில்வே நிலையத்தில் நடந்த நவீனமயமாக்கல் அடிக்கல் நாட்டு விழாவில் ஒவியம், கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு வழங்கி பேசியதாவது:-
புதுவை மாநில வளர்ச்சிக்காக எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பவர் பிரதமர். அவர் தேர்தலின்போது கூறிய பெஸ்ட் புதுச்சேரி என்ற வார்த்தைக்கு ஏற்பத்தான் இந்த நவீன திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை-புதுவை, புதுவை-காரைக்கால் ரெயில் பாதை விரைவில் அமைக்கப்படும் என ரெயில்வே மந்திரி உறுதி அளித்துள்ளார். மக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்தை செம்மைப் படுத்தும் வகையிலான ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. காக்கிநாடா எக்ஸ்பிரஸ் புதன் கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பொலிவுறு திட்டத்தின் கீழ் புதுவை மாநிலம் முழுவதுமாக மாறி வருகிறது.
மக்கள் பிரதிநிதிகள் கேட்கும் திட்டங்கள் அனைத்தையும் பாரத பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். இந்த ஆண்டுதான் 10 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட்டை புதுவை அரசு தாக்கல் செய்தது. ஒரே நாளில் 1 லட்சத்து 46 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 26 ஆயிரம் கோடி புதுவை மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகள் பிறந்த அன்றே ரூ.50 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டம் உள்ளது. காரைக்காலில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி, ஏனாமில் மருத்துவ கல்லூரி ஆகியவற்றையும் பிரதமர் வழங்கி உள்ளார். தற்போது ரூ.93 கோடியில் புதுவை ரெயில் நிலையம் நவீனமய மாக்கப்படுவதற்கும் பிரதமருக்கும், மத்திய ரெயில்வே அமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.