கோப்பு படம்.
null
புதுவையில் சிலை அமைக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமியிடம் காங்கிரஸ், தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் மனு
- தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு புதுவை அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் சட்ட பேரவையில் கோரிக்கை வைத்தோம்.
- அதற்கான முயற்சியை அரசு எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியை எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. ம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்து எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்து தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ செய்தவர். தி.மு.க.வின் தலைவராக 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக இருந்து வழிநடத்தியவர்.
தமிழகம் மற்றும் புதுவை மாநில வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். பொது வாழ்வில் 80 ஆண்டுகாலம் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பணியாற்றிய முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு புதுவை அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் சட்ட பேரவையில் கோரிக்கை வைத்தோம்.
எங்கள் தலைவர் கருணாநிதியின் 4–-ம் ஆண்டு நினைவு தினத்தன்று நாங்களும், எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்களை நேரில் சந்தித்து சிலை நிறுவ வலியுறுத்தினோம். தாங்களும் தலைவர் கருணாநிதியோடு நெருங்கிய தொடர்பும், நட்பும் இருந்தது என்றும் அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றும் தெரிவித்ததோடு, புதுவை அரசு சார்பில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று உறுதியளித்தீர்கள்.
ஆனால் அதற்கான முயற்சியை அரசு எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. கருணாநிதி மறைந்து வருகிற ஆகஸ்ட 8–-ந் தேதியோடு 5 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. எனவே அவரது நினைவு நாளுக்குள் புதுவை அரசு சார்பில் சிலை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.