கோப்பு படம்.
5 ஏக்கரில் சித்தமருத்துவ கல்லூரி- முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
- அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இல்லாததை அரசு அறியுமா? இ.எஸ்.இ. மருத்துவமனையை மாதிரி மருத்துவமனையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?
- இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தொழிலாளர்கள் விடுப்பு கடிதத்திற்குத்தான் செல்கின்றனர். மருத்துவ மனைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
நேரு(சுயே): அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இல்லாததை அரசு அறியுமா? இ.எஸ்.இ. மருத்துவமனையை மாதிரி மருத்துவமனையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?
முதல்-அமைச்சர் ரங்கசாமி: அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் புதுவை மட்டுமின்றி, அண்டை மாநில நோயாளிகளும் வருவதால் படுக்கை வசதி பற்றாக்குறை உள்ளது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சரிசெய்ய முடியாத அளவு பழுதடைந்துள்ளது.
புதிய கருவி வாங்க உள்ளோம். அதுவரை கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யப்படுகிறது. இ.எஸ்.ஐ. மாதிரி மருத்துவமனை அமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடத்தை அந்த கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கும் பரிந்துரையும் அரசிடம் உள்ளது.
நேரு: அரசு மருத்துவமனையில் டாக்டர் பரிந்துரை இருந்தால்தான் படுக்கை வசதி கிடைக்கிறது. புதுவையில் ரூ. 4½ லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை அணுகுகின்றனர். அங்கு கிளீனிக்தான் நடத்து கின்றனர். இதனால்தான் மருத்துவமனை அமைக்க கோருகிறோம். மருத்துவமனை அமைந்தால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நெரிசல் குறையும்.
இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி அமைக்கவும் கோருகின்றனர். மருத்து வக்கல்லூரி அமைந்தால் மாநில மாணவர்களுக்கு மருத்துவ இடங்களும் கிடைக்கும்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி: இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தொழிலாளர்கள் விடுப்பு கடிதத்திற்குத்தான் செல்கின்றனர். மருத்துவ மனைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். கூடுதல் இடம் தேவைப்படுகிறது.
நிலத்தை மருத்துவ மனைக்கு பின்புறம் உள்ள இடத்தை கொடுக்க பரிசீலித்து வருகிறோம். இந்த நிதியாண்டில் ரூ.50 கோடியில் 5 ஏக்கர் பரப்பில் சித்த மருத்துவ கல்லூரி கொண்டுவர உள்ளோம். அந்த கல்லூரிக்கும் அந்த பகுதியிலேயே நிலம் ஒதுக்க ஆலோசித்து வருகிறோம். இந்த மருத்துவமனைகள், கல்லூரி வரும் போது மருத்துவ பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும். அதற்கான நிலமும் தேவைப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.