வழிபாடு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற காட்சி.

பிரதோ‌ஷ வழிபாடுக்கு அனுமதி: சதுரகிரி கோவிலில் திரண்ட பக்தர்கள்

Published On 2022-03-29 12:22 IST   |   Update On 2022-03-29 12:22:00 IST
பிரதோ‌ஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி பங்குனி மாத அமாவாசை, பிரதோ‌ஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நேற்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று திரளான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோ‌ஷமான இன்று காலை பக்தர்கள் தாணிப் பாறை அடிவாரத்தில் இருந்து 7 மணிக்கு மலையேற அனுமதிக்கப்பட்டனர். பிரதோ‌ஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. சுந்தர மகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை அடிவார பகுதியில் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News