காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்- பக்தர்கள் குவிந்தனர்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரிய தலமாக ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் ஏகம்பர நாதர் கோவிலில் பங்குனி மாதஉற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான பங்குனி உற்சவ விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தையொட்டி 24 அடி உயர தேர் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏல வார்குழலியும், ஸ்ரீ ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர்.
இதைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில்ஏலவார் குழலியும், ஸ்ரீ ஏகாம்பர நாதரும் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வீ.பாரதிதாசன், ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா. ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம். மகாலெட்சுமி யுவராஜ், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பொன் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால் காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தெருக்கள் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
தேரோட்டத்தின் போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களை இசைத்தவாறு சென்றனர்.
திருத்தேர் 4 ராஜ வீதிகளில் உலாவந்த பின்னர் மதியம் மீண்டும் தேர் நிலையை அடைந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகள் தேரில் இருந்து கோவிலுக்கு சென்று எழுந்தளி பக்தர்களுக்கு அருளி பாலித்தார்.
இதனையடுத்து திருக்கோவில் உற்சவ மண்டபத்தில் பிராயச்சித்த அபிஷேகமும், விசேஷ திவ்ய சமர்ப்பணமும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு காண கண் அடியேன் பெற்றவாறே என்ற தலைப்பில் அருட் குருநாதர் சிவாக்கர தேசிக சுவாமிகள் திருமுறை அருளுறை நிகழ்த்துகிறார்.
தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் காலை முதல் இரவு வரை அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு இருந்தது. சிவகாஞ்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பங்குனி மாத உற்சவத்தையொட்டி வருகிற 15-ந் தேதி காலையில் ஆறுமுகப் பெருமான் வீதியுலாவும். மாலையில் பிட்சாடனர் தரிசனமும், இரவு மின் அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.
16-ந் தேதி ஆள்மேல் பல்லக்கு உற்சவமும், இரவு திருக்கோயில் வரலாற்றை விளக்கும் வெள்ளி மாவடி சேவைக்காட்சியும் நடைபெறுகிறது.
17-ந் தேதி சபாநாதர் தரிசனம் மற்றும் ஏலவார் குழலியம்மை ஒக்கப் பிறந்தான் குளத்துக்கு எழுந்தருளி வீதி உலா நடக்ககிறது.
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது ஏலவார் குழலி அம்மையும் ஏகாம்பர நாதரும் திருக்கல்யாண திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். அன்று இரவு தங்க இடப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் வீதிஉலா வருகின்றனர்.
18-ந் தேதி பகல் 12 மணிக்கு கந்தப்பொடி உற்சவமும், இரவு நூதன வெள்ளி உருத்திர கோடி விமானத்தில் வீதியுலா வருகின்றனர். 19-ந் தேதி புருஷாமிருக வாகனத்திலும், இரவு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது.
20-ந் தேதி காலையில் சந்திரசேகரர் வெள்ளி இடப வாகனத்தில் எழுந்தருளி சர்வ தீர்த்தக்குளத்தில் தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.