வழிபாடு
திருப்பதி

திருப்பதி: மழையால் வரமுடியாத பக்தர்கள் வைகுண்ட ஏகாதசியில் தரிசனம் செய்ய முடியாது

Published On 2022-01-08 11:38 IST   |   Update On 2022-01-08 11:39:00 IST
கடந்த நவம்பர் 18-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் வைகுண்ட ஏகாதசி நாட்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது புயல் சின்னமாக மாறி கனமழை பெய்தது.

ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்தபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பலத்த மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில் சாலைகள் சேதமடைந்தன. அவை சீரமைப்பு செய்து முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் திருப்பதியில் தரிசனத்திற்காக ஆன்லைனில் டிக்கெட் பெற்று மழைக்காலத்தில் தரிசனத்திற்கு வராத பக்தர்கள் 6 மாதம் வரை தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்தது.

வருகிற 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

எனவே கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 10-ந்தேதி வரை ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் வைகுண்ட ஏகாதசி நாட்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேறு தேதியை மாற்றிக்கொண்டு தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News