வழிபாடு
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலையில் மண்டல பூஜை: கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை

Published On 2021-12-17 09:00 IST   |   Update On 2021-12-17 09:00:00 IST
சபரிமலையில் மண்டல பூஜை நெருங்குவதால், பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள அரசுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் :

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது ஆன்லைன் முன் பதிவு மூலம் தினசரி 40 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன் பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் சன்னிதானத்தில் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கவும், கூடாரங்கள் அமைத்து ஓய்வெடுக்கவும், பம்பையில் பக்தர்கள் நீராடவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் வருகிற 26-ந் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணிக்கு நடைஅடைக்கப்படும். இதையொட்டி முன் பதிவு செய்த பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் சபரிமலையில் 6.55 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அடுத்தமாதம் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. எனவே 14-ந்தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளதால், கூடுதல் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்தது. அதைத்தொடர்ந்து மண்டல பூஜை நெருங்குவதால், பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள அரசுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Similar News