செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 13-ந்தேதி நடை திறப்பு

Published On 2020-02-10 11:37 IST   |   Update On 2020-02-10 11:37:00 IST
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் 13-ந் தேதி நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், கோவில் நடை திறக்கப்பட்டு, பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் 13-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார்.

அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்றாலும், பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். 14-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அன்று முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



இந்த நாட்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெறும்.

அதேபோல் வழக்கமான பூஜைகளுடன், தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். பின்னர் 18-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும்.

ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் உட்பட மாவட்ட தலைநகரங்களில் இருந்து பம்பைக்கு கேரள போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

Similar News