செய்திகள்

திருவள்ளூர் வீரராகவர் கோவில் தேரோட்டம்

Published On 2019-02-06 06:23 GMT   |   Update On 2019-02-06 06:23 GMT
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழா கடந்த 31-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் பல்வேறு வாகனத்தில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ம் நாளான இன்று வீரராகவர் கோயிலில் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட தேரோட்டம் நடைபெற்றது.

திருத்தேரில் காலை 7மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற 8-ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. விழாவின் கடைசி நாளான 9ம் தேதி இரவு 8மணிக்கு வெட்டிவேர் சப்பரம் வீதி உலா நடைபெற உள்ளது.

துணை சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News