செய்திகள்
தர்ப்பணம் செய்த பின்னர் பூஜிக்கப்பட்ட பிண்டம், பொருட்களை காவிரி ஆற்றில் விட்ட காட்சி.

தை அமாவாசை: பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள்

Published On 2018-01-16 09:19 IST   |   Update On 2018-01-16 10:20:00 IST
தை அமாவாசை தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) 3 நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் அதிகாலையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். அதில் தை அமாவாசை மிகவும் விஷேசமானது. இந்த நாளில் புண்ணிய நதி ஓடும் கரைகளில் பக்தர்கள் குவிந்து தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு விருப்பமானவற்றை படைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.

தை அமாவாசை தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) 3 நதிகள் சங்கமிக்கும் ஈரோடு அருகே உள்ள பவானி கூடுதுறையில் அதிகாலை இருந்தே பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

குடும்பம், குடும்பமாக வந்திருந்த இவர்கள் காவிரி ஆற்றின் கரையோரம் தங்களது முன்னோர்களுக்கு பிண்டங்கள் படைத்து ஹோமங்கள் வளர்த்து தர்ப்பணம் செய்தனர்.

பிறகு அந்த பிண்டங்களை ஆற்றில் கரைத்து வழிபட்டனர். முன்னதாக கூடுதுறையில் நீராடினார்கள். காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்று கொண்டிருந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

தண்ணீர் குறைவாக இருந்ததால் தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. பக்தர்கள் அந்த தண்ணீரில் நீராடி திதி கொடுத்தனர்.

ஒரு சிலர் ஆற்றில் தண்ணீர் ஓடும் ஆழமான பகுதிக்கு சென்று நீராடினர். அந்த பகுதிக்கு சென்று நீராட வேண்டாம் என்று அவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்களும், திருப்பூர், நாமக்கல், கோவை மாவட்ட பக்தர்களும் கூடுதுறையில் குவிந்தனர்.

பவானி கூடுதுறையில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தவர்களை படத்தில் காணலாம்.

அய்யப்ப பக்தர்களும் அதிக அளவில் காணப்பட்டனர். சபரிமலை சென்றவர்களும், சென்று திரும்பியவர்களும் கார், வேன், பஸ்களில் கூடுதுறைக்கு வந்து வழிபட்டனர்.

வழக்கமாக பவானி கூடுதுறையில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இன்று செவ்வாய்க்கிழமையோடு தை அமாவாசை வந்துள்ளதால் கூடுதலான பக்தர்களை பார்க்க முடிந்தது.

போலீசார் மற்றும் பவானி தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் பரிசலில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலையொட்டி உள்ள காவிரி படித்துறையிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்து தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

கொடுமுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றங்கரையிலும் இன்று அதிகாலையிலேயே மக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் தங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு இஷ்டமான பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை படைத்து தர்ப்பணம் செய்தனர்.

பிறகு அதை காவிரி ஆற்றில் விட்டனர். ஆற்றில் புனித நீராடினர். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Similar News