செய்திகள்

பிள்ளையார்பட்டியில் 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொடி ஏற்றம்

Published On 2016-08-23 13:39 IST   |   Update On 2016-08-23 13:39:00 IST
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார் பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 27- ந் தேதி காலை கொடி ஏற்றப்படுகிறது. இரவு மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் வீதி உலா நடைபெறும்.

இதை தொடர்ந்து தினமும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்திலும், இரவு சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், இடபவாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.

6-ம் நாளான செப்டம்பர் 1-ந் தேதி மாலை 6 மணி அளவில் கஜமுகா சூரசம் காரமும், இரவு வீதி உலாவும். 7-ம் நாளன்று மயில் வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

3-ந் தேதி குதிரை வாகனத்திலும், 4-ந் தேதி காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும். வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சந்தனகாப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் அன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

அதே தினத்தன்று மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டம், இரவு யானைவாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும்.

10-ம் நாளான 5-ந் தேதி கோவில் திருக்குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்ததவாரியும், பகல் 12 மணிக்கு மூலவருக்கு ராட்ச‌ஷ கொழுக்கட்டை படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணிக்கு ஐம்பெரும் மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகிறார்கள்.

Similar News