செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணி

அரையிறுதியில் இந்தியாவுடன் மோதுவது இங்கிலாந்தா? நியூசிலாந்தா?

Published On 2019-07-04 09:35 GMT   |   Update On 2019-07-04 09:35 GMT
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்திடம் மோத அதிக வாய்ப்புள்ளது. இல்லையென்றால் ஒருவேளை நியூசிலாந்தை சந்திக்கலாம்.
12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ‘லீக்’ ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது. நேற்றுடன் 41 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

ஆஸ்திரேலியா முதல் அணியாகவும், இந்தியா 2-வது அணியாகவும், இங்கிலாந்து 3-வது அணியாகவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. 4-வது அணியாக நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதிபெற இருக்கிறது.

நியூசிலாந்து அணி 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி 4 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 9 புள்ளிகள் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை (5-ந்தேதி) சந்திக்கிறது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணியும், நியூசிலாந்தும் 11 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். நிகர ரன் ரேட்டில் ஒரு அணி முன்னேறும்.

நியூசிலாந்தின் ரன் ரேட் +1.75 ஆகும். பாகிஸ்தான் ரன் ரேட் -0.792 ஆகும். ரன் ரேட்டில் மிகவும் மோசமாக இருப்பதால் வங்காளதேசத்தை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் பாகிஸ்தான் தகுதி பெற முடியும். இது மிகவும் இயலாத ஒன்றாகும்.

பாகிஸ்தான் முதலில் விளையாடி 350 ரன் குவித்தால் 311 ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். 400 ரன் குவித்தால் 316 ரன்னிலும், 450 ரன் குவித்து 321 ரன் வித்தியாசத்திலும் வெல்ல வேண்டும்.

வங்காள தேசம் முதலில் பேட்டிங் செய்தால் எந்த பலனும் இல்லை. இதனால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற முடியாது. அந்த அணி வெளியேற்றப்படுகிறது. நியூசிலாந்து அரை இறுதிக்கு தகுதி பெறுகிறது.

இலங்கை, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே வெளியேறி இருந்தன.

‘லீக்’ ஆட்டங்கள் 6-ந் தேதியுடன் முடிகிறது. முதல் அரை இறுதி ஆட்டம் 9-ந்தேதி மான்செஸ்டரிலும், 2-வது அரை இறுதி 11-ந்தேதி பர்மிங்காமிலும் நடக்கிறது.



புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணியும், 4-வது இடத்தை படிக்கும் அணியும் முதல் அரையிறுதியில் மோதும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது அரையிறுதியில் மோதும்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 6 வெற்றி, 1 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 13 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கையுடன் 6-ந் தேதி மோதுகிறது. இதில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றால் இந்திய அணி முதல் இடத்தை பிடிக்கும்.

அப்படி நடந்தால் இந்திய அணி அரை இறுதியில் நியூசிலாந்துடன் மோதும். ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை சந்திக்கும்.



இந்திய அணி இலங்கையை வென்று, ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் தற்போதுள்ள நிலமைப்படி ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் 16 மற்றும் 15 புள்ளிகளுடன் அதே நிலையில் நீடிக்கும். அப்படி நிகழ்ந்தால் இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்தை சந்திக்கும். ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை எதிர் கொள்ளும்.

ஒருவேளை இந்திய அணி இலங்கையிடம் தோற்றாலும் இங்கிலாந்தைதான் அரையிறுதியில் சந்திக்க வேண்டும்.
Tags:    

Similar News