செய்திகள்
விராட் கோலி

நடுவர் விஷயத்தில் விராட் கோலி அடக்கி வாசிக்க வேண்டியது அவசியம் ....

Published On 2019-07-03 10:25 GMT   |   Update On 2019-07-03 10:25 GMT
அப்பீல் விவகாரத்தில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் விராட் கோலி அடக்கி வாகிக்காவிடில், இரண்டு போட்டிகளில் தடையை சந்திக்க நேரிடும்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆடுகளத்தில் எப்போதுமே ஆக்ரோஷமாக செயல்படக்கூடியவர். ஒவ்வொரு பந்துக்கும் எமோசனை வெளிப்படுத்துவார். ஆன்-பீல்டு நடுவர்கள் சில நேரங்களில் இந்தியாவுக்கு எதிராக தவறான முடிவுகளை கொடுத்துவிட்டால், தவறுகலாக கொடுத்து விட்டார் என்று எளிதாக கடந்து சென்று விடமாட்டார்.

நடுவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபடுவார். அப்படித்தான் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு அபராதத்துடன் தகுதியிழப்பு புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டது.

ஐசிசி விதிப்படி 24 மாதத்திற்குள் நான்கு புள்ளிகள் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 இதில் எது முதலில் வருகிறதோ, அதில் விளையாட தடைவிதிக்கப்படும்.



கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ஒரு தகுதியிழப்பு புள்ளி பெற்றிருந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஒரு புள்ளி பெற்றார். இதனால் விராட் கோலி இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் முகமது ஷமி வீசிய பந்தை சவுமியா சர்கார் தடுத்தாட முயன்றார். அப்போது பந்து பேடில் பட்டது. நடுவரிடம் அப்பீல் கேட்க அவர் மறுத்துவிட்டார். இதனால் ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தினார் விராட் கோலி. அப்போது பந்து பேட்டிலும், பேடிலும் ஒருசேர டச் ஆனது போன்று தெரியவந்தது. இதனால் குழப்பம் அடைந்த 3-வது நடுவர் பேட்ஸ்மேனுக்கு சாதகமான வகையில், பந்து முதலில் பேட்டில் பட்டதாக அறிவித்ததோடு, இந்தியாவுக்கு ரிவியூ வாய்ப்பு கிடையாது எனவும் அறிவித்தார்.

இதனால் கோபம் அடைந்த விராட் கோலி ஆன்பீல்டு நடுவர்களிடம் விவாதம் செய்தார். விராட் கோலியின் கோபத்தில் நியாயம் இருந்தாலும் நடுவரிடம் அபராதத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. ஆனால், நடுவர்கள் இதுகுறித்து புகார் செய்யவில்லை.



ஒருவேளை இலங்கைக்கு எதிரான போட்டியில் இதுபோன்று செயல்பட்டால் கட்டாயம் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை இரண்டு புள்ளிகள் பெற்றால் விராட் கோலியால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும். அப்படியிருந்தால், இந்தியா மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

இதனால் விராட் கோலி நடுவர்கள் விவகாரத்தில் அடக்கி வாசிக்க வேண்டும் என்பது அவசியம்...
Tags:    

Similar News