செய்திகள்
சதமடித்த மகிழ்ச்சியில் ரோகித் சர்மா

ரோகித் சர்மாவின் அபார சதத்தால் வங்காள தேசத்திற்கு 315 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2019-07-02 13:22 GMT   |   Update On 2019-07-02 16:27 GMT
ரோகித் சர்மாவின் அபார சதம், லோகேஷ் ராகுலின் அரைசதத்தால் வங்காள தேசத்திற்கு 315 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
பர்மிங்காம்:

இந்தியா - வங்காள தேச அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டனர்.

ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

பவர்பிளேயான முதல் 10 ஓவரில் இந்தியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது என்ற கடும் விமர்சனத்திற்கு இன்றைய போட்டியில் பதிலடி கொடுத்துள்ளது. வங்காள தேசத்தின் பந்துவீச்சை இருவரும் வெளுத்து வாங்கினர்.



உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா 4வது சதமடித்து அசத்தினார். அவர் 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து அரை சதமடித்து ஆடிய லோகேஷ் ராகுல் 77 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கியவர்களில் ரிஷப் பந்த் அரை சதமடிக்க தவறினார். அவர் 48 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 314 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, வங்காள தேசத்துக்கு 315 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

வங்காள தேசம் சார்பில் முஷ்டாபிஜுர் ரஹ்மான் 5 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன், ருபெல் உசேன், சவுமியா சர்க்கார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 
Tags:    

Similar News