செய்திகள்

ரன்அவுட், கேட்ச், டிஆர்எஸ் ரிவியூ வாய்ப்புகள் மிஸ்ஸிங்: ரசிகர்களுக்கு மரண வலியை ஏற்படுத்திய தென்ஆப்பிரிக்கா

Published On 2019-06-20 10:23 GMT   |   Update On 2019-06-20 10:23 GMT
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பல்வேறு மிஸ்ஸிங்கால் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து லீக் சுற்றோடு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தென்ஆப்பிரிக்கா.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய தென்ஆப்பிரிக்காவுக்கு, இந்த உலகக்கோப்பை தொடர் சிறப்பானதாக அமையவில்லை.

மூன்று தோல்விகளுக்குப்பின் ஆப்கானிஸ்தானை மட்டுமே வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஐந்து போடடிகளில் 3 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், நேற்று நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் பல தவறுகள் மூலம் வெற்றி வாய்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

49 ஓவரில் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தென்ஆப்பிரிக்கா தனது பந்து வீச்சால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை சிறப்பாக கட்டுப்படுத்தியது. ஆனால், கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவருக்குத் துணையாக கொலின் டி கிராண்ட்ஹோம் 60 ரன்கள் சேர்த்தார்.

நெருக்கடியான நேரத்தில் தென்ஆப்பிரிக்காவின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்ததால் தோல்வியை சந்தித்துள்ளது. 37-வது ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்சை டேவிட் மில்லர் பிடிக்க தவறினார். இதனால் 74 ரன்களில் அவுட்டாகுவதில் இருந்து கேன் வில்லியம்சன் தப்பினார்.

இதே ஓவரின் கடைசி பந்தில் கேன் வில்லியம்சன் பந்தை அடிக்க முயற்சி செய்தார். பந்து பேட்டில் சரியாக படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. இம்ரான் தாஹிர் மட்டும் அப்பீல் கேட்டார். டி காக் ஏதும் கேட்கவில்லை. இதனால் டு பிளிசிஸ் டிஆர்எஸ் அப்பீல் கேட்கவில்லை. பின்னர் ரீபிளே-யில் பந்து பேட்டை உரசிச் சென்றது தெளிவாக இருந்தது. டிஆர்எஸ் கேட்டிருந்தால் வில்லியம்சன் அவுட்டாகியிருப்பார்.

மேலும், ரபாடா வீசிய 41-வது ஓவரின் முதல் பந்தில் கேன் வில்லியம்சன் க்ரீஸ்-ஐ விட்டு நீண்ட தூரத்தில் இருக்கும்போது ரபாடா ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார். அப்போது பந்து ஸ்டம்பில் படவில்லை. டேவிட் மில்லர் ஸ்டம்பிற்கு பின்னால் நின்று அவசரத்தில் பந்தை பிடித்து அடிக்க முயன்றார்.

ஆனால் பந்து அவரது கையில் இருந்து நழுவிச் சென்றது. கையால் ஸ்டம்பை தாக்கினார். அத்துடன் தென்ஆப்பிரிக்காவின் வெற்றியும் கையில் இருந்து நழுவிச் சென்றது. 77 ரன்னில் இருந்து தப்பிய கேன் வில்லியம்சன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காம் அசத்தினார்.

உலகக்கோப்பையில் எப்போதுமே தென்ஆப்பிரிக்காவுக்கு மழை சவாலாக இருந்து வருவது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நெருக்கடியான நிலையில் ஜாம்பவான்களின் கேட்ச் மிஸ், ரன்அவுட் மிஸ் ஆகியவற்றால் பரிதாபமாக தோல்வியை சந்தித்துள்ளது.



1999 உலகக்கோப்பையின்போது ஸ்டீவ் வாக் அடித்த பந்தை கிப்ஸ் கேட்ச் பிடித்து, சந்தோசத்தை வெளிப்படுத்துவதற்கு வானத்தை நோக்கி பந்தை வீச முயன்றார். அப்போது பந்து அவரது கையில் இருந்து நழுவியது. இதனால் போட்டி டை ஆனது.

2015 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக முக்கியமான கட்டத்தில் டி வில்லியர்ஸ் அருமையான ரன்அவுட் வாய்ப்பை தவறவிட்டார். அத்துடன் வெற்றியையும் தவறவிட்டார்.

இந்த உலகக்கோப்பையில் மில்லர் கேட்ச் மற்றும் ரன்அவுட்டை தவறவிட்டதால் லீக் சுற்றோடு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News