செய்திகள்

உணர்ச்சிவசப்படாமல் ஆடி பாகிஸ்தானை வீழ்த்தினோம் - விராட்கோலி

Published On 2019-06-17 07:40 GMT   |   Update On 2019-06-17 08:04 GMT
உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் உணர்ச்சிவசப்படாமல் ஆடியதால் வெற்றி பெற்றோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
மான்செஸ்டர்:

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 3-வது வெற்றியை பெற்றது.

மான்செஸ்டர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்தது.

ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 113 பந்தில் 140 ரன்னும் (14 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 65 பந்தில் 77 ரன்னும் (7 பவுண்டரி), லோகேஷ் ராகுல் 78 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது அமீர் 3 விக்கெட்டும், ஹசன் அலி, வகாப், ரியாஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியவில்லை.

இதனால் டக்வொர்த்- லீவிஸ் விதிமுறை பின்பற்றப்பட்டது. இந்த விதிப்படி பாகிஸ்தான் அணிக்கு 40 ஓவர்களில் 302 ரன் இலக்காக இருந்தது. அந்த அணி 212 ரன்னையே எடுத்து இருந்ததால் இந்திய அணி 89 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பகர்ஜமான் அதிக பட்சமாக 62 ரன்னும், பாபர் ஆசம் 48 ரன்னும், இமாத் வாசிம் 46 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய்சங்கர், ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா 7-வது முறையாக வீழ்த்தியது. இதுவரை ஒருமுறைகூட தோற்கவில்லை.

இந்த வெற்றி குறித்து கேப்டன் விராட்கோலி கூறும் போது, குல்தீப் யாதவின் பந்து வீச்சை வெகுவாக பாராட்டினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த ஆடுகளம் எந்தவித வித்தியாசத்தையும் தரவில்லை. நான் ‘டாஸ்’ வென்று இருந்தாலும் பந்து வீச்சைதான் தேர்வு செய்து இருப்பேன். இந்த பிட்சில் 2-வது பேட்டிங் செய்யும் போது பந்து நன்றாக திரும்பியது. சரியான பகுதியில் நேர்த்தியாக வீசினால் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க முடியும்.

ரோகித் சர்மா மீண்டும் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ராகுல் உதவியாக இருந்தார். ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர் என்பதை ரோகித்சர்மா மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். வீரர்களின் கூட்டு முயற்சியால் 336 ரன்களை குவித்தோம்.

குல்தீப் யாதவ் அற்புதமாக பந்து வீசினார். பாபர்ஆசமும், பகர்ஜமாலும் நிலைத்து ஆட முயற்சித்தனர். ஆனால் அவர்களை நீண்ட நேர விளையாட விடக்கூடாது என்று விரும்பினேன். பாபர் ஆசமை குல்தீப் யாதவ் அவுட் செய்த பந்து அருமையானது. இந்த உலக கோப்பையில் இதுதான் சிறந்த பந்து வீச்சாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி எங்களை வீழ்த்தியது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படக்கூடாது என்று விரும்பினோம். அப்படி செய்தால் அது தவறாக போகக் கூடும்.

அந்த பார்வையோடு பாகிஸ்தானை நாங்கள் அணுகவில்லை. விளையாட்டை விளையாட்டாகவே பார்த்தோம். அதிகமாக உணர்ச்சி வசப்படாததால் வெற்றி பெற முடிந்தது.

இவ்வாறு கோலி கூறினார்.

தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-

டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது சரியான முடிவுதான். ஆனால் எங்கள் பவுலர்கள் சரியான பகுதியில் நேர்த்தியாக வீசவில்லை.

ரோகித் சர்மாவை எப்படி அவுட் செய்வது என்று திட்டமிட்டோம். அதை சரியாக செயல்படுத்தவில்லை. எங்கள் திட்டத்தை அவர் தவிடு பொடியாக்கி விட்டார். இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. பந்து வீச்சும் நேர்த்தியாக இருந்தது. விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது.

இந்த தோல்வியால் இனி வரும் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வெற்றி மூலம் இந்தியா 7 புள்ளியுடன் 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இந்திய அணி 5-வது ஆட்டத்தில் ஆப்காஸ்தானை வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) சந்திக்கிறது.

பாகிஸ்தான் 6-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 23-ந்தேதி எதிர்கொள்கிறது.
Tags:    

Similar News