செய்திகள்

இதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்

Published On 2019-06-14 10:15 GMT   |   Update On 2019-06-14 10:15 GMT
உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் நிலையில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன. வரும் ஞாயிற்றுகிழமை (ஜூன் 16) நடைபெற உள்ள 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் விளையாட்டினை பொருத்தவரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டு கிர்க்கெட் ரசிகர்களிடையேயும் மிகுந்த ஏதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையே ஆன வித்தியாசம் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் சச்சின் தெண்டுல்கர் கூறியதாவது:-

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 17-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு ஏதிரான பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தினை பார்த்தேன். முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 308 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 136 ரன்களுக்கு 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் போட்டியின் முக்கியமான பகுதியில் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். அவர்கள் இக்கட்டான நிலையில் இருக்கும்போது நெருக்கடியை கையாள முடியாமல் தோல்வியினை தழுவினர்.

ஆனால் இந்திய அணியினை பொருத்தவரை பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு ஆகிய அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடக்க வீரர்கள் தங்கள் பங்கினை சிறப்பாக செய்து வருகின்றனர். விராட் கோலி அணியினை நிலைப்படுத்துவதற்கு முக்கிய வீரராக உள்ளார். டோனி மற்றும் பாண்டியா போன்ற வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையின்போது அணியினை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பினை சரிவர செய்து வருகின்றனர்.



இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை பொருத்தவரை போட்டியின் நெருக்கடியை கையாள்வதே இரு அணிகளுக்கு இடையே ஆன வித்தியாசமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்டினை பொருத்தவரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News