உலகம்

உலக எய்ட்ஸ் தினம் இன்று..

Published On 2023-12-01 13:39 GMT   |   Update On 2023-12-01 13:39 GMT
  • உலகெங்கிலும் 39 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் எச்.ஐ.வி-யுடன் வாழ்கின்றனர்.
  • ஐக்கிய நாடுகளின் அமைப்பான UNAIDS,'சமூகங்களை வழிநடத்தட்டும்' என்ற கருப்பொருளை வழங்கியுள்ளது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் தீண்டத்தகாதவர்களாக தான் பார்க்கிறோம். எங்கே, அவர்களிடம் இருந்து நமக்கும் நோய் பரவிவிடுமோ என்கிற அச்சமும் ஒரு பக்கம். ஆனால், உடலளவிலும், மனதளவிலும் அவர்களுக்குள் இருக்கும் வேதனை சொல்ல முடியாதது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் குறைவாக இருப்பதால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதேசமயம், எய்ட்ஸ் நோய் என்னென்ன காரணங்களால் பரவுகிறது என்கிற புரிதல் இல்லாமல் அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடிய நிலையும் சமூகத்தில் இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால், சமூகம் மாற வேண்டும். 

உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், எச்.ஐ.வி நோயால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும் வகையிலும் உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஒரு தினமாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு, எய்ட்ஸ் நோய் மீதான விரிவான மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கைக்காக ஐக்கிய நாடுகளின் அமைப்பான UNAIDS,'சமூகங்களை வழிநடத்தட்டும்' என்ற கருப்பொருளை வழங்கியுள்ளது. இதற்கான ஒரு சிறப்பு வலைப்பக்கத்தில், இந்த ஆண்டுக்கான கருப்பொருளைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை ஐநா அமைப்பு விளக்கியுள்ளது.

உலகெங்கிலும் 39 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் எச்.ஐ.வி-யுடன் வாழ்கின்றனர். அவர்களில் 20.8 மில்லியன் பேர் கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ளனர் மற்றும் 6.5 மில்லியன் பேர் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ளனர். 

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில், 92 லட்சம் மக்கள் அவர்களுக்குத் தேவையான எச்.ஐ.வி. சிகிச்சை பெறாமல் உள்ளனர் என்றும் பலருக்கு தங்களின் நிலை குறித்து தெரியவில்லை என்றும் எச்.ஐ.வி. தொடர்பான பாதிப்புகளால் ஒவ்வொரு நாளும் 1,700 உயிர்கள் பறிபோகின்றன என்றும் 3,500 பேர் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

2030க்குள் பொது சுகாதார அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய எய்ட்ஸ் நோயை வேரோடு ஒழிக்க வேண்டும் என்ற இலக்கை 2015 ஆம் ஆண்டு ஐநா முதன்முதலில் நிர்ணயித்தது. இந்த இலக்கை அடைவதற்கு, நம்முன் உள்ள சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐநா உள்பட சர்வதேச உலக அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags:    

Similar News