உலகம்

கெர்சன் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷிய ராணுவம் வெளியேறிய கெர்சன் நகருக்கு வருகை தந்த அதிபர் ஜெலன்ஸ்கி

Published On 2022-11-14 11:55 GMT   |   Update On 2022-11-14 11:55 GMT
  • ரஷிய ராணுவம் வெளியேறியதால் கெர்சன் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
  • கெர்சன் நகரை ஆக்ரமித்தபோது ரஷிய ராணுவம் 400-க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டினார்.

கீவ்:

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின.

அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றினர்.

இதற்கிடையே, கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள், படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன என தெரிவித்தார்.

இந்நிலையில், கெர்சன் நகரில் இருந்து ரஷிய ராணுவம் வெளியேறியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நகரைப் பார்வையிட்டார். அங்குள்ள படைவீரர்களிடம் நகரின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அதிபரைப் பார்த்த மக்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.

அப்போது பேசிய அவர் கெர்சன் நகரில் ரஷிய ராணுவம் வெளியேறியது போரின் முடிவுக்கான ஆரம்பம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News