உலகம்

மெலிடோபோல் நகரில் ரஷிய ராணுவ தளம் மீது குண்டுகள் வீசி தாக்குதல்: உக்ரைன் ராணுவம் அதிரடி

Published On 2022-08-16 10:09 GMT   |   Update On 2022-08-16 10:09 GMT
  • தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றன.
  • கடலில் நீந்திக்கொண்டிருந்த 3 பேர் அடையாளம் தெரியாத சாதனம் வெடித்ததில் உயிரிழந்தனர்

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் மரியுபோல், மெலிடோபோல் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. அங்கு தங்களது ராணுவ நிலைகளை அமைத்துள்ளனர். தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ரஷியாவின் ராணுவ தளம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. ரஷியா கைப்பற்றிய மெலிடோபோல் நகரில் தனது துணை ராணுவ தளத்தை அமைத்துள்ளது. இங்கிருந்து உக்ரைனின் மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த ராணுவ தளத்தை குறிவைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ரஷிய ராணுவம் தளம் மீது குண்டுகள் வீசி தாக்கப்பட்டது. ராணுவ தளத்துக்கு செல்லும் பாலம் தகர்க்கப்பட்டது.

இதுகுறித்து கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் செர்ஜி கெய்டே கூறும்போது, "ரஷியாவின் ராணுவ தளம், துல்லியமான தாக்குதல் மூலம் அழிக்கப் பட்டது என்று தெரிவித்தார்.

ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய கூட்டாளியான பிரிகோஜினுடன் தொடர்புடையதாக கூறப்படும் வாக்னர் ராணுவ குழுவினர், மெலிடோபோல் நகரில் உள்ள ராணுவ தளத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஒடேசா நகரில் கடலில் நீந்திக்கொண்டிருந்த 3 பேர் அடையாளம் தெரியாத சாதனம் வெடித்ததில் உயிரிழந்தனர் என்றும் வெடிக்காத கண்ணி வெடிகள் இருப்பதால் கடற்கரைக்கு செல்வோர் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று உக்ரைன் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News