உலகம்

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ரிஷி சுனக்-லிஸ் டிரஸ் வார்த்தை மோதல்

Published On 2022-07-27 02:37 GMT   |   Update On 2022-07-27 02:37 GMT
  • லிஸ் டிரஸ்சின் வரி குறைப்பு திட்டம் கோடிக்கணக்கான மக்களைத் துன்பத்தில் தள்ளும்.
  • ரிஷி சுனக்கிடம் வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை.

லண்டன் :

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வௌியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் வேட்பாளர்களுக்கு இடையிலான முதல் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் கலந்து கொண்டு நேருக்கு நேர் விவாதித்தனர். அப்போது இருவரும் தங்களது பொருளாதார கொள்கைகள் மற்றும் வரித் திட்டங்கள் குறித்து கடுமையான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இதனால் விவாதத்தில் அனல் பறந்தது.

லிஸ் டிரஸ், தான் பிரதமரானால் நாட்டில் வரியை குறைப்பேன் என கூறிவருவதை குறிப்பிட்டு பேசிய ரிஷி சுனக், "லிஸ் டிரஸ்சின் வரி குறைப்பு திட்டம் கோடிக்கணக்கான மக்களைத் துன்பத்தில் தள்ளும். மேலும் அது அடுத்த பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்" என்று எச்சரித்தார்.

அப்போது குறுக்கிட்ட லிஸ் டிரஸ், " இங்கிலாந்தை போல் வேறு எந்த நாடும் வரிகளை விதிக்கவில்லை. ரிஷி சுனக்கிடம் வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், "நிதி மந்திரியாக இருந்தபோது ரிஷி சுனக் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரிகளை உயர்த்தினார். அதனால்தான் நாம் இப்போது மந்தநிலையை எதிர்நோக்குகிறோம்" எனவும் கூறினார். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறி காரசாரமாக விவாதித்தனர்.

Tags:    

Similar News