விளம்பரத்தால் வந்த வினை... கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - டிரம்ப்
- ஒண்டாரியோ மாகாண அரசு அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
- கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்தார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 முதல் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தினார். இதை சரி செய்ய இரு நாடுகள் இடையேயும் வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இதற்கிடையே கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ இன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
1987 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஒரு உரையில், வரிகள் ஒவ்வொரு அமெரிக்க தொழிலாளி மற்றும் நுகர்வோரையும் பாதிக்கும் என்றும், கடுமையான வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்றும் பேசியிருந்தார்.
இந்த வீடியோவை இணைத்து கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
ரொனால்ட் ரீகனின் உரை தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், வீடியோவை பயன்படுத்த தங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை கூறியது.
இதற்கிடையே பொய்களை பரப்புவதாக கூறி டிரம்ப், கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்தார்.
இந்நிலையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்தார்.
இந்நிலையில், கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டிரம்ப், "கனடா அதிபர் மார்க் கார்னி என் நல்ல நண்பர்தான். கனடா எனக்கு மிகவும் பிடிக்கும். கனடா வெளியிட்ட போலியான விளம்பரம் எனக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்தார்.