உலகம்

டிரம்ப் உத்தரவால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடருவதில் பெல்ஜியம் இளவரசிக்கு சிக்கல்

Published On 2025-05-24 14:43 IST   |   Update On 2025-05-24 14:43:00 IST
  • வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது.
  • ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து பலர் படித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்புக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.

வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார். ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது. எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் தடாலடியாக நிறுத்தினார்.

இந்த சூழலில், வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடியாக அமைந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்பின் உத்தரவை தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவு ஹார்வர்டில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்குத் தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது.

இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் இளவரசியும், வருங்கால ராணியுமான எலிசபெத் (வயது 23) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். தற்போது டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவால் இளவரசி எலிசபெத் தனது படிப்பை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெல்ஜிய அரச அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் லோர் வாண்டூர்ன் கூறும்போது, "இளவரசி எலிசபெத் தனது முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் முடிவின் தாக்கம் வரும் நாட்களில் தெளிவாகும். தற்போது நிலைமையை ஆராய்ந்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News