உள்நாட்டு போருக்கு மத்தியில் மியான்மரில் தேர்தலை நடத்தும் ராணுவம்!
- இராணுவத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கீழ் 57 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன.
- ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி (NLD) கலைக்கப்பட்டு, இந்தத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் (NLD) பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்ற சில மாதங்களில் 2021-ல் மியான்மரில் ராணுவப் புரட்சி வெடித்தது. இராணுவத்தால் ஆட்சி கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி, தற்போது சிறையில் உள்ளார்.
ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் ஜனவரி 11 மற்றும் ஜனவரி 25 ஆகிய தேதிகளில் இரண்டு சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். அதேநேரத்தில் 65 நகரங்களில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இராணுவத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கீழ் 57 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன. இதில் இராணுவ ஆதரவு பெற்ற ஒன்றிணைந்த ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி (USDP) முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி (NLD) கலைக்கப்பட்டு, இந்தத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்தத் தேர்தலை ஒரு "ஏமாற்று வேலை" (sham) என்றும், இராணுவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான முயற்சி என்றும் விமர்சித்துள்ளன. ஆனால் ரஷ்யா, சீனா, பெலாரஸ், கஜகஸ்தான், கம்போடியா, வியட்நாம், நிகரகுவா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தலை மேற்பார்வையிட நேற்றே மியான்மருக்கு சென்றனர்.