உலகம்

சாகசத்தின் போது தீப்பிடித்த விமானம்.. நடுவானில் மிதந்த விமானி.. பரபரத்த ஏர்-ஷோ..!

Published On 2023-08-14 19:52 IST   |   Update On 2023-08-14 19:52:00 IST
  • "தண்டர் ஓவர் மிச்சிகன்" விமான சாகச நிகழ்ச்சியின் 25-வது ஆண்டு விழா நடைபெற்றது
  • போர் விமானம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கியது

அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தின் வாஷ்டெனா கவுன்டியில் (Washtenaw County) உள்ளது சிலான்டி (Ypsilanti) நகரம். இந்நகரத்தின் கிழக்கே உள்ளது வில்லோ ரன் (Willow Run) விமான நிலையம்.

இந்த விமான நிலையத்தில் "தண்டர் ஓவர் மிச்சிகன்" (Thunder Over Michigan) எனும் ஒரு விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நேற்றும், நேற்று முன் தினமும் இந்நிகழ்ச்சியின் 25வது ஆண்டு விழாவுடன், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வந்தது.

இதில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு வானில் நடைபெற்ற பலவித விமானங்களின் சாகசங்களை கண்டு ரசித்து வந்தனர்.

நிகழ்ச்சி நடைபெற்ற போது உயரே பறந்து கொண்டிருந்த ஒரு மிக்-23 (MiG-23) போர் விமானத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக புகை வெளிப்பட்டது.

அது விழுந்து விடும் என உறுதியான நிலையில் அந்த விமானத்தை இயக்கிய இரு விமான ஓட்டிகளும் பாராசூட் வழியாக, போர் விமானத்தில் இருந்து குதித்தனர்.

பிறகு, சில நொடிகளிலேயே அந்த விமானம் தீப்பிடித்து, வில்லோ ரன் விமான நிலையத்தின் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடுயிருப்பின் வாகன நிறுத்துமிடம் அருகே விழுந்து நொறுங்கியது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. பாராசூட்டில் குதித்த விமானிகள் பத்திரமாக தரையிறங்கினர். விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே தண்டர் ஓவர் மிச்சிகன் அமைப்பு, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாக முகநூலில் அறிவித்து விட்டது.

இதனையடுத்து, நிகழ்ச்சியை கண்டுகளிக்க அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் கலைந்து சென்றனர்.

அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு (FAA), தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் (NTSB) விபத்து குறித்து ஆராய்ந்து வருகின்றன.

பார்வையாளர்கள் இந்த விபத்தின் வீடியோ காட்சியை வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

Similar News