உலகம்

இலங்கையில் போராட்டத்தை கைவிட மக்கள் மறுப்பு: இடைக்கால அரசு அமைவதில் சிக்கல் நீடிப்பு

Published On 2022-07-11 10:06 GMT   |   Update On 2022-07-11 10:06 GMT
  • அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.
  • கொழும்பு அருகே அவர் ரகசிய இடத்தில் பலத்த ராணுவ பாதுகாப்புடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

கொழும்பு:

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மார்ச் மாதம் முதல் தெருக்களில் இறங்கி போராட தொடங்கினார்கள்.

மக்கள் போராட்டம் எழுச்சியாக மாறியதால் கடந்த மாதம் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பு ஏற்றார். என்றாலும் பொருளாதார குழப்பத்தை சீர்படுத்த முடியவில்லை.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று முன்தினம் கொழும்பில் லட்சக்கணக்கில் திரண்டனர். அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்து கைப்பற்றினார்கள். ஜனாதிபதி அலுவலகமும் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

மக்கள் கொலை வெறியுடன் திரண்டு வந்ததால் உயிர் பிழைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்களாவை காலி செய்து விட்டு தப்பி ஓடினார். அவர் வெளிநாட்டுக்கு ஓடி இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் கொழும்பு அருகே அவர் ரகசிய இடத்தில் பலத்த ராணுவ பாதுகாப்புடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை அதிபர் கோத்தபய ராஜபக்சே கடிதம் ஒன்றை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர், "ஏற்கனவே அறிவித்த படி ஜூலை 13-ந்தேதி பதவியில் இருந்து விலகுவேன்" என்று தெரிவித்து உள்ளார்.

பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய ராஜபக்சே மீண்டும் மீண்டும் கூறினாலும் கொழும்பில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். 13-ந்தேதி வரை நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று போராட்ட பிரதிநிதிகள் கெடுவிதித்துள்ளனர்.

கொழும்பு காலி முகதிடலில் இன்று காலை நிருபர்களை சந்தித்தபோது அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டனர். ஜனாதிபதிக்கு பதில் பிரதமர் ஆட்சி அதிகாரத்தை செய்ய வேண்டும் என்று விதி இருந்தாலும் அதை அனுமதிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

மேலும் ரணில் விக்கிரமசிங்கேவும் உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகிய பிறகு அனைத்து கட்சிகளை யும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புதிய ஆட்சியை உருவாக்க சிலர் நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.

இது தவிர இலங்கையில் அமைய உள்ள இடைக்கால அரசாங்கம் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அரசாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதற்கு மாறாக சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்க எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் முயற்சி செய்தால் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளனர்.

அனைத்து கட்சிகள் கொண்ட ஆட்சி அமைந்தால் அது இன்னொரு ஊழலுக்கு வழிவகுத்து விடும் என்றும் அதற்கு வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்த தோடு புதிய ஆட்சி தொடர்பாகவும் நிபந்தனைகள் விதிப்பதால் இலங்கையில் மாற்று அரசு அமைவதில் சிக்கல் எழுந்துள்ளது. புதிய அரசு எப்போது எப்படி அமையும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே கொழும்பில் இல்லாததால் அமைச்சர்களும், ஆளும் கட்சியினரும் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று 3-வது நாளாக பொதுமக்கள் அதிபர் மாளிகையில் தங்கியிருந்து பொழுதை போக்கினார்கள்.

Tags:    

Similar News