உலகம்

இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிராக போராட்டம்- ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

Published On 2023-01-08 08:30 GMT   |   Update On 2023-01-08 08:30 GMT
  • பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
  • டெல்அவிவ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நெதன்யாகு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

டெல்அவிவ்:

இஸ்ரேலில் கடந்த மாதம் நடந்த பொதுத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. நெதன்யாகுவின் லிகுட் கட்சி 32 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

யாயிர் லாபிட் தலைமையிலான கூட்டணி 51 இடங்களை பிடித்தது. அந்நாட்டின் நான்கு ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் இதுவாகும். கடந்த 4 முறை நடந்த தேர்தல்களில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நெதன்யாகு வெற்றி பெற்று கடந்த 29-ந்தேதி பிரதமராக பதவியேற்றார்.

இந்த நிலையில் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. டெல்அவிவ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நெதன்யாகு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

ஜனநாயகம், சுதந்திரம் ஆபத்தில் உள்ளது. பாசிசம் மற்றும் நிறவெறிக்கு எதிராக ஒன்றிணைவோம் உள்ளிட்ட பதாகைகளை போராட்டக்காரர்கள் கொண்டு வந்து இருந்தனர்.

டெல் அவிவ் நகரில் மத்திய மற்றும் தெற்கு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. போராட்டக்காரர்கள் கூறும்போது, எங்கள் நாடு ஜனநாயகத்தை இழக்க போகிறது என்று நாங்கள் உண்மையில் பயப்படுகிறோம். சட்ட விசாரணையில் இருந்து விடுபட விரும்பும் ஒருவருக்காக நாங்கள் சர்வாதிகாரத்துக்குள் செல்கிறோம் என்றனர்.

இஸ்ரேலில் சில ஆண்டுகளாக நிலையான அரசு அமையாமல் இருந்து வந்த நிலையில் தற்போது நெதன்யாகு தலைமையில் அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News