உலகம்

சீனாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து- 10 பேர் பலி

Update: 2022-11-25 07:21 GMT
  • சீனாவில் சமீபகாலமாக தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
  • தொடர்ச்சியாக தீ விபத்து நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியான ஜின்ஜியாங் மாகாணம் உரும்கியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி இருளில் மூழ்கியது. தீ வேகமாக பரவியதால் அந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் மூச்சு திணறியும், உடல் கருகியும் பரிதாபமாக இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்பட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

சீனாவில் சமீபகாலமாக தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய சீனா பகுதியில் ஒரு கம்பெனியில் வெல்டிங் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சீனாவில் மீண்டும் கொரானோ பரவல் அதிகரித்து வருவதால் பல நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். தற்போது இதுபோன்று தொடர்ச்சியாக தீ விபத்து நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News