உலகம்

பிரான்சில் ஈபிள் கோபுரத்தில் போதையில் தூங்கிய சுற்றுலா பயணிகள்

Published On 2023-08-16 06:42 GMT   |   Update On 2023-08-16 06:42 GMT
  • அமெரிக்காவை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள், நேற்று முன்தினம் ஈபிள் கோபுரத்தை சுற்றி பார்க்க வந்திருந்தனர்.
  • இருவரும் விசாரணைக்காக பாரிஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருக்கும் ஈபிள் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க குடும்பத்துடன் வருகிறார்கள்.

இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள், நேற்று முன்தினம் ஈபிள் கோபுரத்தை சுற்றி பார்க்க வந்திருந்தனர். அவர்கள் இருவரும் அன்று இரவு மது அருந்திவிட்டு பாதுகாப்பையும் மீறி, ஈபிள் கோபுரத்தின் உச்சிக்கு சென்று விட்டனர். மது போதையில் இருந்த அவர்கள் திரும்பி வரும் வழியில் அங்கேயே தூங்கி விட்டனர்.

மறுநாள் காலை 9 மணிக்கு ஈபில் கோபுரத்தை திறக்கும் முன்பு அங்கு வந்த பாதுகாப்பு காவலர்கள் அங்கு 2 பேர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை எழுப்பி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அமெரிக்கர்கள் என்பதும் அதிக மதுபோதையில் இருந்ததால் அங்கேயே தூங்கியதும் தெரியவந்தது.

குடிபோதையில் இருந்த அமெரிக்கர்கள் இரவு 10:40 மணியளவில் நுழைவு டிக்கெட்டுகளை வாங்கி மேலிருந்து கீழே செல்லும் போது பாதுகாப்பு தடைகளைத் தாண்டி குதித்து கோபுரத்தின் 2-வது மற்றும் 3-வது நிலைகளுக்கு இடையில் உள்ள படிக்கட்டில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத இடத்தில் படுத்து தூங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இருவரும் விசாரணைக்காக பாரிஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஈபிள் டவர் மூடப்பட்டது. வெடிகுண்டு சோதனைக்கு பின்னர் அந்த தகவல் போலியானது என்று தெரியவந்தது.

2 மணி நேரம் கழித்து மீண்டும் ஈபிள் டவர் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News