கோப்புப் படம்
வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் - ஆப்கானிஸ்தானில் 6 பேர் பலி
- ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே தாக்குதல் நடந்தது.
- இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்களின் போட்டி அமைப்பான கொராசன் மாகாண ஐ.எஸ். அமைப்பானது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளது. மாலிக் அசார் சதுக்கம் அருகே அமைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார்.
அந்த நபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவதை அறிந்த பாதுகாப்புப் படையினர் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பயங்கரவாதி வெடிக்கச் செய்தார்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்புப் படையினர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.