உலகம்

இலங்கை அதிபர் மாளிகையில் திருடிய 3 பேர் கைது

Published On 2022-07-26 03:23 GMT   |   Update On 2022-07-26 03:23 GMT
  • அதிபர் மாளிகையில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட அரிய கலைப்பொருள்கள் மாயமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
  • அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்சென்ற பொருட்களை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொழும்பு:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் கடந்த 9-ந்தேதி அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடி அவற்றை ஆக்கிரமித்தனர். எனினும் பின்னர் அவர்கள் அந்த கட்டிடங்களில் இருந்து படிப்படியாக வெளியேறினர். எஞ்சியிருந்த ஒரு சிலரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போலீசார் சேத விவரங்களை ஆய்வு செய்தனர். இதில் அதிபர் மாளிகையில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட அரிய கலைபொருள்கள் மாயமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்சென்ற பொருட்களை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

போதை ஆசாமிகளாக அவர்கள் 3 பேரும் அதிபர் மாளிகையில் திரைச்சீலைகளை தொங்கவிடுவதற்காக சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட 40 பித்தளை கொக்கிகளை திருடி சென்றதாகவும், ராஜகிரியா நகரில் உள்ள கடையில் அவற்றை விற்க முயன்றபோது போலீசில் பிடிப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News