தென் கொரியா கூட்ட நெரிசல் விபத்து
தென்கொரியாவில் சோக நிகழ்வு- திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழப்பு
- கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டது.
- குறுகிய தெருவில் சிக்கித் தவித்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
இடோவான்:
தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறும். இந்த திருவிழாவில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இடோவான் மாவட்டத்திற்கு வருகை தருவார்கள். கொரோ தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்ற நிலையில் பேய் வேடமணிந்த தென் கொரிய மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து முன்னோக்கி தள்ளப்பட்ட பெரிய கும்பலால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் நசுக்கப்பட்டனர்.
அப்போது மூச்சுத் திணறி உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என சியோல் நகர மீட்புப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் 74 உடல்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், தெருக்களில் வைக்கப்பட்டிருந்த 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படும் வகையில் அருகிலுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்தது குறித்த அறிந்த தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். உடனடியாக காயமடைந்தவர்களை காப்பாற்ற மருத்துவ குழுக்களுக்கு அவர் உத்தரவிட்டதாக அதிபர் மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளார்.