உலகம்

பேச்சுவார்த்தையில் இழுபறி.. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷியா தாக்குதல் - மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்

Published On 2026-01-25 10:56 IST   |   Update On 2026-01-25 10:56:00 IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து முதல் முறையாக உக்ரைன் - ரஷியா - அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.
  • உக்ரைன் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமாக கார்க்கிவ் உட்பட 17 பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேட்டோ நாடுகளுடன் சேர முயற்சித்த உக்ரைனால் தங்களுக்கு ஆபத்து என கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.

தீர்வு எட்டப்படாமல் நான்கு ஆண்டுகளை கடந்து உக்ரைன் -ரஷியா போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றத்துமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்த பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து முதல் முறையாக உக்ரைன் - ரஷியா - அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.

டான்பாஸ் உள்ளிட்ட கைப்பற்றிய பிராந்தியங்களை ரஷியா விட்டுத் தர மறுப்பதால் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் நேற்று உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமாக கார்க்கிவ் உட்பட 17 பகுதிகள் மீது ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.

குடியிருப்பு கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அங்கு குளிர்காலம் என்பதால் மக்கள் மின்சாரமின்றி கடும் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர்.  

Tags:    

Similar News