உலகம்

தன்னை ஆதரிக்கும் கிம்மிற்கு புதின் அளித்த விலை உயர்ந்த சொகுசு கார்

Published On 2024-02-20 12:26 GMT   |   Update On 2024-02-20 12:26 GMT
  • வல்லரசு நாடுகளான சீனாவும் வட கொரியாவும் ரஷியாவை ஆதரிக்கின்றன
  • ரோல்ஸ்-ராய்ஸ் காரை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டது ஆரஸ்

கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

உலகின் பல நாடுகள் ரஷியாவை எதிர்த்ததால், அந்நாடு தனிமைப்படுத்தப்பட்டது.

ஆனால், வல்லரசு நாடுகளான சீனாவும், வட கொரியாவும் ரஷியாவை ஆதரிக்கின்றன.


உக்ரைனுடனான போரில் ரஷியாவிற்கு தேவைப்படும் பீரங்கிகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வட கொரியா வழங்கி உதவியது.

கடந்த 2023 செப்டம்பர் மாதம் சிறப்பு விருந்தாளியாக ரஷியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை (Kim Jong-un), ரஷிய அதிபர் புதின், ரஷியாவின் கிழக்கே உள்ள வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் (Vostochny Cosmodrome) எனும் ஏவுதளத்தை பார்வையிட அழைத்து சென்றார்.

அப்போது, புதினின் ஆரஸ் செனட் (Aurus Senat) லிமோசின் ரக காரை கிம், ஆர்வமுடன் பார்வையிட்டார்.

சொகுசு கார் பிரியரான கிம் ஜான் உன், தனது வாகன நிறுத்துமிடத்தில் பல வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கி குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது நிலைப்பாட்டை ஆதரிக்கும் வட கொரிய அதிபருக்கு, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு உயர்ரக சொகுசு காரை பரிசளித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆரஸ் (Aurus) எனப்படும் முழு நீள அதிநவீன சொகுசு கார், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் பிரத்யேக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆரஸ், உலகின் விலையுயர்ந்த கார்களில் ஒன்றான ரோல்ஸ்-ராய்ஸ் பேண்டம் (Rolls-Royce Phantom) எனும் மாடலை அடிப்படையாக கொண்டு ரஷியாவில் உருவாக்கப்பட்ட சொகுசு கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரோல்ஸ்-ராய்ஸை விட ஆரஸ் சற்று நீளம் அதிகமான காராகும்.


புதின் பரிசளித்திருக்கும் ஆரஸின் புகைப்படங்களோ, அந்த காரில் அவருக்காக செய்யப்பட்டுள்ள பிரத்யேக மாறுதல்கள் குறித்தோ இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை.

வரவிருக்கும் மாதங்களில் ரஷிய அதிபர் புதின், வட கொரியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இரு நாடுகளிலிருந்தும் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சொகுசு கார்கள் உட்பட விலையுயர்ந்த பரிசுகளை வட கொரியாவிற்கு எந்த நாடும் அளிக்க கூடாது எனும் ஐ.நா.வின் உத்தரவை புதின் மீறியுள்ளதாக தென் கொரியா குற்றம் சாட்டியது.

Tags:    

Similar News