உலகம்

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது தனியார் நிறுவன விண்கலம்

Published On 2024-02-23 08:14 IST   |   Update On 2024-02-23 08:24:00 IST
  • அமெரிக்கா, சோவியத் ரஷியா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நிலவில் கால் பதித்துள்ளன.
  • கடந்த 15-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் விரைவாக நிலவில் தரையிறக்கம்.

அமெரிக்காவின் ஹூஸ்டனை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனம் கடந்த 15-ந்தேதி நவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் நிலவை சென்றடையும் வகையிலான ஐஎம்-௧ விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது.

இந்த விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் இணைந்தது. இந்த நிலையில் அமெரிக்க நேரப்படி நேற்று நள்ளிரவு விண்ணில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒடிசியஸ் லேண்டர் தரையிறங்கியதும் முதலில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பின் மெல்லமெல்ல தகவல் பரிமாற்றம் நடைபெற்றதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நிலவில் லேண்டர் தரையிறங்கியது உறுதிப்படுத்தியது.

அமெரிக்கா கடந்த 1972-ம் ஆண்டு நிலவில் விண்கலத்தை தரையிறக்கியது. அதன்பின் சுமார் 52 ஆண்டுகள் கழித்து தற்போது அமெரிக்காவின் தனியார் நிறுவனம் நிலவில் வெற்றிகரமாக ஐஎம்-௧ விண்கலத்தின் ஒடிசியஸ் லேண்டரை தரையிறக்கியுள்ளது.

இதற்கு முன்னதாக அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியது. அதன்பின் தனியார் நிறுவனம் தற்போது நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த இன்டியூடிவ் மெஷின்ஸ் (Intuitive Machines) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஐஎம்-1 (IM-1) விண்கலத்தின் ஒடிஸியஸ் லேண்டர் நோவா-சி வகையைச் சேர்ந்தது. ஆறு கால்களை கொண்ட அறுங்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15-ம் தேதி, ஒடிஸியஸ் லேண்டர் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

மற்றொரு நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜியின் நிலவு லேண்டர், ஜனவரி 8-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே உந்துவிசை கலனில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News