உலகம்

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 800-ஆக உயர்வு

Published On 2025-09-01 15:27 IST   |   Update On 2025-09-01 15:27:00 IST
  • நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • 2,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையை யொட்டிய பகுதியாகும்.

குனார் மாகாணத்தில் நேற்று இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0-வாக பதிவாகி இருந்தது. அடுத்தடுத்து 4.5 ரிக்டர் அளவில் பதிவானது.

நகங்கா் மாகாணத்தில் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு- வடகிழக்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது. அதை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானது. இரவில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். எங்கு பார்த்தாலும் ஒரே அலறல் சத்தமாக கேட்டது.

நிலநடுக்கத்தில் முதலில் 622 பேர் பலியானதாக தகவல் வெளியானது. ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இதை தெரிவித்தார். 1,300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

குனார் மாகாணம்தான் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குதான் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என்றும், ஏராளமானோர் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

நூர்குல், சோகி, வாட்பூர் மனோகி, சபதாரே ஆகிய மாவட்டங்களில் குறைந்தது 250 பேர் பலியானதாக குனார் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 800-ஆக உயர்ந்தளு்ளது.

2,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

சாலை வழியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர முடியாதவர்களை வான் வழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. பல இடங்க ளில் சாலைகள் கட்டிட இடிபாடுகளால் சூழப்பட்டு இருப்பதால் மீட்பு குழுவினர் நுழைய முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஒரே மாகாணத்தில் அடுத்தடுத்து 3 கிராமங்கள் ஒட்டு மொத்தமாக சேதம் அடைந்து உள்ளது. இங்கு உள்ள கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வருவது, கட்டிடங்கள் இடிந்து விழுவது போன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஆப்கானிஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. வெள்ளத்தைதொடர்ந்து நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் உள்கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்து இருந்த நிலையில் நில நடுக்கம் அதன் கோர முகத்தைக் காட்டியிருக்கி றது. இதனால் சாலை வசதிகள் இன்றி மக்கள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் நேரிட்ட நிலநடுக்கத்தால் ஆயிரம் பேருக்கும் மேல் பலியான நிலையில், இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முன்னணி இடம் வகிக்கிறது.

Tags:    

Similar News