நடுவானில் பறந்தபோது திடீரென திறந்த கதவு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்- வீடியோ
- விமானத்தில் 171 பயணிகள், 6 விமான பணியாளர்கள் பயணித்தனர்.
- உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால் அசம்பாவிதம் நடைபெறவில்லை.
அலாஸ்கா விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் "737-9 MAX" விமானம் போர்ட்லேண்டில் இருந்து ஒண்டாரியோவுக்கு (கலிபோர்னியா) 171 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் நடுப்பக்கத்தில் உள்ள வெளியேறும் கதவு திடீரென திறந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பயங்கரமான காட்சியை சில பயணிகள் செல்போனில் பதிவு செய்தனர்.
இதுகுறித்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், அவர் உடனடியாக விமானத்தை போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதன்பின் தகவலை பகிர்ந்து கொள்கிறோம் என அலாஸ்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் 16,325 அடி உயரத்தில் பறக்கும்போது இந்த சம்பவம் நடைபெற்றதாக கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
விமானத்தின் வெளியேறும் கதவு விமானத்தில் இருந்து முற்றிலும் விலகி தனியாக சென்றதாக விமானத்தில் இருந்த சில பயணிகள் தெரிவித்தனர்.
அலாஸ்காவுக்கு இந்த விமானம் கடந்த அக்டோபர் 1-ந்தேதி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 11-ந்தேதியில் இருந்து அலாஸ்கா வணிக பயன்பாட்டிற்கு ஈடுபத்தி வந்துள்ளது.