உலகம்

விலை உயர்ந்த கார் - நூதன திருட்டு - அதிநவீன விளம்பரம்: புளோரிடாவில் பரபரப்பு

Published On 2023-10-14 09:59 GMT   |   Update On 2023-10-14 10:05 GMT
  • சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயிஸ் திருடு போனது
  • துப்பு தருபவர்களுக்கு ரூ.4 லட்சம் பரிசு அறிவித்திருந்தார்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி, பல கோடீசுவரர்களின் விருப்பமான வசிப்பிட பகுதியாக உள்ளது.

ஏரியல் பேனர்ஸ் (Aerial Banners) எனும் நிறுவனத்தின் உரிமையாளரான பாப் பென்யோ (61) எனும் பெரும் கோடீசுவரர் இங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள இவரது மிக பெரிய பண்ணை வீட்டில் தனது பல கார்களுடன் ஒரு விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் (Rolls Royce Wraith) காரையும் பாப் வைத்திருந்தார். இதன் விலை சுமார் ரூ.2 கோடி ($250,000) இருக்கும்.

சில நாட்களுக்கு முன் அவரது மனைவி ஓல்கா பென்யோ (41) தனது 2 குழந்தைகளுடன் அக்காரில் வெளியே சென்று விட்டு மீண்டும் பங்களாவிற்கு திரும்பினார். அவர் காரை அதன் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு பங்களாவிற்கு உள்ளே சென்ற சிறிது நேரத்தில் 2 திருடர்கள் உள்ளே நுழைந்தனர்.

பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் அக்காரை சுலபமாக சிறிது நேரத்தில் அவர்கள் திருடி வெளியே வேகமாக ஓட்டி சென்று விட்டனர். பங்களாவின் நிறுத்துமிடத்தின் ரிமோட் உபகரணத்தை போன்றே தாங்களாக ஒன்று தயார் செய்து வந்து அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அவரது நிறுத்துமிடத்தில் ஆஸ்டன் மார்ட்டின் கார் ஒன்றும், 1970 செவர்லே காரும் இருந்தது. அந்த கார்களை விட்டு விட்டு ரோல்ஸ் ராயிஸ் காரை திருடி சென்றுள்ளனர்.

இதனையடுத்து கார் திருடு போனதை காவல்துறையிடம் தெரிவித்த பாப் பென்யோ, காணாமல் போன காரை கண்டு பிடித்து தர வித்தியாசமாக விளம்பரம் செய்தார்.

ஒரு விமானத்தின் பின்பகுதியில் ஒரு மிக பெரிய பேனரில் தனது செல்போன் நம்பருடன் "காணவில்லை - ஊதா நிற ரோல்ஸ் ராயிஸ்" என குறிப்பிட்டு, அத்துடன் அதை கண்டு பிடித்து தருபவர்களுக்கு சுமார் ரு.4 லட்சம் ($5000) பரிசும் அறிவித்திருந்தார்.

அந்த விமானம் இந்த பேனருடன் வானில் மியாமி நகர் முழுவதும் பறந்தது.

அந்த விளம்பரத்தை பார்த்த ஒரு பெண், அந்த ரோல்ஸ் ராயிஸ் காரை தான் கண்டதாக தகவல் தந்ததையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அதை மீட்டனர். கார் பத்திரமாக மீட்கப்பட்டாலும் அதனுள்ளே பென்யோவின் மனைவி வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த பல பொருட்கள் களவாடப்பட்டிருந்தது.

காணாமல் போன விலையுயர்ந்த காருக்காக பாப் கையாண்ட நூதன விளம்பர வழிமுறை சமூக வலைதளங்களில் மிகவும் பேசப்படுகிறது.

Full View


Tags:    

Similar News